சி.பி.எஸ்.இ. போன்றே போலி வலைதளம் மூலம் பண மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரி பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.
பிப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்வுகள்
பிப்ரவரி 15 முதல் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் சிபிஎஸ்இ போன்றே போலி வலைதளம் மூலம் பண மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரி பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி இணையதளம்:
இதுகுறித்து சிபிஎஸ்இ கூறும்போது, ''cbse.gov.in என்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணையதளத்தைப் போன்றே விஷமிகள் சிலர், போலி இணையதளத்தை உருவாக்கி, அதைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். உதாரணமாக, https://cbsegovt.com/ என்ற பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன்மூலம், பெற்றோர்கள், பள்ளிகள், மாணவர்களுக்குப் போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதில், நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யப் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணையதளத்துக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம். இதுகுறித்த மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிபிஎஸ்இ நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய, எந்தப் பணத்தையும் நேரடியாக நாங்கள் வசூலிக்கவில்லை'' என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
திறன் அடிப்படையில் தேர்வுகள்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கேள்விகள் மாற்றி அமைக்கப்பச உள்ளன. இதுகுறித்து அரசு கூறும்போது, ''தேசிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை சீரமைக்க உள்ளோம். இதற்காக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை திறன் அடிப்படையில் மாற்றி அமைக்க உள்ளோம்.
கொள்குறி வகை, பதிலை உருவாக்கும் வகை, அசர்ஷன் வகை, ரீசனிங் மற்றும் சம்பவத்துக்கு ஏற்ற முடிவு (objective type, constructing response type, assertion and reasoning and case based format) ஆகிய பல்வேறு வடிவங்களில் கேள்விகள் இருக்கும்.
2022- 23ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 40 சதவீதக் கேள்விகளும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 30 சதவீதக் கேள்விகளும் திறன் அடிப்படையில் அமைய உள்ளன'' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.