ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், மலிவு விலையில் மருந்துப் பொருள்களை விற்பனை செய்து வரும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் 10,000ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 


இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2017ஆம் ஆண்டில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரித்தது.


கடந்த 2020ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை 6,000 ஆனது. கடந்த நிதியாண்டு இறுதியில் மருந்தகங்களின் எண்ணிக்கை 8,610ஆக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 9,000-ஆக எட்டியுள்ளது. 


நாட்டில் மொத்தமுள்ள 766 மாவட்டங்களில், மக்கள் மருந்தகங்கள் 743 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 10,000ஆக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


மக்கள் மருந்தகங்களில் தற்போது 1,759 வகை மருந்துகளும் 280 அறுவை சிகிச்சை கருவிகளும் விற்கப்படுகின்றன. மருந்துப் பொருள்களானது சந்தை விலையை விட 50 முதல் 90 சதவீதம் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.18,000 கோடியை மக்கள் சேமித்துள்ளனா். 


கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.893.56 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்கப்பட்டன. அதன் மூலம் சுமாா் ரூ.5,300 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த நவம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.758.69 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்கள் விற்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமாக சுமாா் ரூ.4,500 கோடியை மக்கள் சேமித்துள்ளனா். 


மக்கள் மருந்தகத்தை அமைக்க ரூ.5 லட்சம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக சுய வேலைவாய்ப்பையும் அத்திட்டம் உறுதிசெய்து வருகிறது. 


வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகளில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பின்தங்கிய மாவட்டங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.2 லட்சமானது கூடுதல் மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. 


மகளிா், முன்னாள் ராணுவத்தினா், பட்டியலினத்தோா், பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் மக்கள் மருந்தகங்களைத் தொடங்கவும் தனி மானியம் வழங்கப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, மக்கள் மருந்தகம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "மத்திய அரசின் மக்கள் மருந்தகம் மூலம் குறைவான விலையில் தரமான மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது" என்றார்.