அமெரிக்கா, பிரிட்டன் போன்று இந்தியாவும் இரு அவை நாடாளுமன்றத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை போன்று இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உள்ளது. ஆளும் கட்சி கொண்டு வரும் மசோதாக்கள் இரண்டு அவையிலும் நிறைவேற்றினால் மட்டுமே சட்டம் ஆகும்.


மக்களவையை பொறுத்தவரையில் அதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதாவது, மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.


மாநிலங்களவையை பொறுத்தவரையில், மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். அதில், 233 பேர் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாலும் 12 பேர் நியமனங்கள் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்கியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 


அந்த வகையில், கடந்தாண்டு ஜூலை மாதம், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீரர் பி.டி. உஷா உள்ளிட்டோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.


இந்நிலையில், நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவை தலைவர் இருக்கையை அலங்கரித்துள்ளார் பி.டி. உஷா. பொதுவாக, குடியரசு துணை தலைவர்தான் மாநிலங்களவை தலைவராக செயல்படுவார்.


அவர் ஓய்வு எடுக்கும் நேரத்தில் துணை தலைவர் தலைவராக செயல்படுவார். அவரும் இல்லாதபோது, மூத்த மாநிலங்களவை உறுப்பினர்கள் தற்காலிக தலைவராக செயல்படுவார்கள்.


இன்றைய கூட்டத்தொடரில் குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், ஓய்வு எடுத்த நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினரான பி.டி. உஷா, சிறுதி நேரம் மாநிலங்களவை தலைவராக செயல்பட்டார்.


மாநிலங்களவை தலைவராக செயல்பட்ட அந்த தருணத்தை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பி.டி. உஷா. வீடியோவை வெளியிட்ட அவர், "பெரும் சக்தி என்பது பெரும் பொறுப்பை உள்ளடக்கியது என்று பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் கூறியது மாநிலங்களவை கூட்டத் தொடருக்கு நான் தலைமை தாங்கிய போது உணர்ந்தேன். 


எனது மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதன் மூலம் மைல்கற்களை உருவாக்குவேன் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவை அவர் பதிவிட்டதை தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 






டிசம்பரில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் இல்லாதபோது அவை நடவடிக்கைகளை நடத்தும் மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவில் முதல் முறையாக நியமன உறுப்பினர் ஒருவர் இடம்பெற்றார். அந்த பெருமை பி.டி. உஷாவை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.