PSLV-C61 Failed: பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டில் தவறு நடந்தது எங்கே? சொதப்பியது எப்படி? என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

சொதப்பிய பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்

 EOS-09 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைகோளை இன்று காலை 5.59 மணியளவில் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டது. இதற்காக பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டை ஆயத்தப்படுத்தியது. நேற்று தொடங்கிய 22 மணி நேர கவுண்டவுன் முடிவுற்றதை அடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்த சூழலில், திடீரென தொழில்நுட்ப கோளாறு உருவானது. இதனால், எதிர்பாராத விதமாக, திட்டத்தின் இலக்கினை அடையமுடியவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஏமாற்றம் அளித்தது.

தவறு நடந்தது எங்கே?

பிஎஸ்எல்வி - சி61 ராக்கெட் மொத்தம் நான்கு கட்டங்களாக செயல்படுகிறது. அதன்படி,  தரையில் இருந்து விண்னை நோக்கிய முதல் 112 விநாடி பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தொடர்ந்து இரண்டாவது நிலை இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு, அடுத்த இரண்டரை மணி நேரமும் ராக்கெட் திட்டமிட்டபடி செயல்பட்டது. 263வது விநாடியில் ராக்கெட்டின் மூன்றாவது கட்ட பிரிவு பணிகள் தொடங்கியது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்து இருக்க வேண்டிய இந்த கட்டத்தில் தான், சுமார் 336 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிந்தபோது, உந்துதலுக்கான உரிய அழுத்தம் இன்றி ராக்கெட் கட்டுப்பாட்டை அறையுடனான இணைப்பை இழந்து தரையை நோக்கி சரிந்தது. இதனால், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி - சி61 ராக்கெட்டின் பயணம் தோல்வியில் முடிந்தது.

இஸ்ரோ கொடுத்த விளக்கம் என்ன?

ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “ராக்கெட்டின் மூன்றாவது கட்டத்தை செயல்படுத்தும்போது, எங்களால் கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் இலக்கை பூர்த்தி செய்யமுடியவில்லை. மூன்றவாது கட்டத்தில் பயன்படுத்தப்படும் சாலிட் அதாவது திடநிலை ராக்கெட் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறே திட்டத்தின் தோல்விக்கு காரணமாக கருதபப்டுகிறது. வான்வெளியை அடைந்த பிறகு அதிகபட்சமாக 240 கிலோ நியூட்டன்ஸ் உந்து சக்தியை வழங்கக் கூடிய திறன் கொண்ட இந்த மோட்டாரில் கோளாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து வருகிறோம். இதுகுறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும்” என செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் விளக்கினார்.

60 வெற்றிப் பயணங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் கடந்த 1993ம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புவிவட்டப்பாதையின் பல்வேறு பகுதிகளுக்கு இதுவரை 60 செயற்கைகோள்கள், இந்த ராக்கெட்டுகள் மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளன. அதிகப்படியான வெற்றிகள் காரணமாக,இந்தியாவின் விண்வெளி குதிரை என்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் புகழப்படுகின்றன. அந்த வரிசையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விண்ணில் பறந்த 61வது பிஎஸ்எல்வி ராக்கெட் இலக்கை அடையாதது இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்விகள்:

போலார் சாட்லைட் லாஞ்சிங் வெஹைகிள் எனப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை, இஸ்ரோவால் 63 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் 60 முறை வெற்றிகரமாக இலக்குகள் அடையப்பட்டுள்ளன. வெறும் மூன்று முறை மட்டும் தோல்வியை கண்டுள்ளன. 

  • முதல்முறையாக கடந்த 1993ம் ஆண்டு PSLV-D1 என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், இரண்டாம் நிலை பிரிவின் போது வெடித்து சிதறியது
  • தொடர்ந்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017ம் ஆண்டுதான் பிஎஸ்எல்வி இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்தது. PSLV- C39 ராக்கெட்டில் இடம்பெற்று இருந்த செயற்கைகோளின் வெப்பக் கவசம் செயல்படாததால் திட்டம் தோல்வியுற்றது.
  • அதனை தொடர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு EOS-09 எனப்படும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் பணியில் பிஎஸ்எல்வி தற்போது தோல்வியுற்றுள்ளது.

PSLV-C61 மிஷன், PSLV-யின் 63வது பயணத்தையும், PSLV-XL கான்ஃபிகரேஷனை பயன்படுத்திய 27வது பயணத்தையும் குறிக்கிறது. இது மேம்பட்ட உந்துதல் மற்றும் பெரிய சுமை திறனுக்காக அறியப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வேரியண்டாகும். இந்த திட்டமானது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில், குறிப்பாக அனைத்து வானிலை பூமி கண்காணிப்புக்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.