ISRO PSLV-C61: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது பிஎஸ்எல்வி - சி 61 எனப்படும் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 61:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து EOS-09 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. PSLV-C61 என்ற ராக்கெட் மூலம் சூரியனை ஒத்த சுற்றுவட்டப்பாதைக்கு, 1,710 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் கொண்டு சென்று நிலைநிறுத்தப்பட திட்டமிடப்பட்டது. EOS-09 என்பது EOS-04 இன் தொடர்ச்சியான செயற்கைக்கோள் ஆகும். இது தொலைநிலை உணர்திறன் தரவை உறுதி செய்வதற்கும், கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியா விண்ணில் செலுத்திய 101வது திட்டத்திற்கான 22 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை 7.59 மணியளவில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, இன்று காலை 5.59 மணியளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

மூன்றாவது கட்டத்தில் தோல்வி:

தொடர்ந்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், “திட்டத்தின் மூன்றாவது கட்ட செயல்பாட்டின் போது, கண்காணிப்பு மற்றும் இலக்கு திட்டமிட்டபட செயல்படவில்லை என்பதை நாங்கள் கண்டோம். மொத்தமாக நான்கு கட்டங்களை கொண்ட ராக்கெட்டின் முதல் இரண்டு கட்டங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டன. ஆனால் மூன்றாவது கட்டத்தில் தொஇல்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவாக ஆராய்ந்து என்ன ஆனது என்பதை அறிந்தபிறகு, உரிய விளக்கங்கள் வழங்கப்படும்” என தெரிவித்தார். புவி கண்காணிப்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த செயற்கைகோள் திட்டமிடப்பட்டபடி நிலைந்றுத்த முடியாமல் போயுள்ளது. இது ஓட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிற்கான இழப்பு என்ன?

RISAT எனப்படும் ரேடார் இமேஜிங் சாட்டிலைட் சீரிஸின் 7வது செயற்கைகோளாக, EOS - 09 திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சக்திவாய்ந்த C - பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சுர் ரேடார் இடம்பெற்று இருந்தது. இது இரவு, பகல், மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலையில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் வல்லமை கொண்டது. இந்திய பாதுகாப்பு படைக்கு திட்டமிடுதலுக்கு ஏற்றவாறு நிகழ்நேர தரவுகளை வழங்கக் கூடியதாக இருந்தது. எல்லை கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பங்களிக்கும் திறன் கொண்டிருந்ததோடு,, பேரிடர் மேலாண்மை, விவசாய கண்காணிப்பு மற்றும் இயற்கை ஆதாரங்களை கண்டுபிடிப்பது ஆகிய பணிகளும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.