சந்திரயான் சாதனை படைத்ததை தொடர்ந்து அடுத்த சாதனையை படைக்க தயார் நிலையில் உள்ளது இஸ்ரோ. சூரியனை ஆராய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்துள்ளது.
ஆதித்யா எல்1:
இந்த ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் இதுதான். PSLV C-57 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்படுகிறது.
1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் 125 நாட்கள் பயணம் மேற்கொண்டு எல்1 பகுதியை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் லாக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் பகுதியில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளது. இதனால், ஆதித்யா எல்1 செயற்கைகோள் வெற்றி பெற வேண்டும் என 140 கோடி இந்தியர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதோடு, நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்த நாடாக இந்தியா விளங்கும்.
ஆய்வுகள் என்ன?
பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய உள்ளது.
இஸ்ரோ சொல்வது என்ன?
இஸ்ரொ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் வெறும் 1 சதவிகிதம் மட்டும் தான். சூரியன் ஒரு மாபெரும் வாயுக் கோளமாகும், எனவே ஆதித்யா-எல்1 சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். ஆதித்யா-எல்1 சூரியனில் இறங்காது அல்லது சூரியனை நெருங்காது” எனவும் தெரிவித்துள்ளது.