ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாவட்டத்தில் பெரும் கலவரம் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிதாக உருவான 13 மாவட்டங்கள்:


ஆந்திராவில் அமலாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கோனாசீமா என்ற மாவட்டம் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு  அறிவித்த 13 புதிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் அடங்கும். இதனால் ஆந்திராவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தன. புதிய மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அந்த மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், தலித் அமைப்பினர் உள்ளிட்ட பலர் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்த ஆந்திரா அரசு கோனசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சேர்த்து  ‘அம்பேத்கர் கோனசீமா’ என்ற பெயரை வைக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.


போராட்டத்தில் குதித்த அமைப்புகள்: 


ஆனால், ஆந்திர அரசின் இந்த முடிவை எதிர்த்து  கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. முதலில் போராட்டமாக நடந்தது பின்னர் கலவரமாக மாறியது.  அமலாபுரம் நகரில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறை, கல்விநிறுவன, இருச்சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த கலவரத்தில் காவலர்கள் பலர் காயமடைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










இந்த கலவரத்தின் போது ஆளுங்கட்சி எம்எல்ஏவான மும்மிடிவரம் சதீஷின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதே போல போக்குவரத்து அமைச்சர்  விஸ்வரூப்பின் வீட்டிலிருந்த பொருள்களுக்கும் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் காவல்துறை தடுப்பை மீறி மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்கலை வீசி காவல்துறையினரை தாக்கியதால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.






பேக்வாட்டர்ஸ் கேரளாவுடன் ஒப்பிடப்படும் கோனசீமா:


வங்காள விரிகுடாவிற்கும் கோதாவரி ஆற்றின் துணை நதிகளுக்கும் இடையில் அமைந்துள்ள கோனசீமாவானது, பேக்வாட்டர்ஸ் கேரளாவுடன் ஒப்பிடப்படுகிறது. சுற்றுலாப்பகுதியாகத் திகழும் இந்த மாவட்டத்திற்கு பாரம்பரியப் பெயரையே வைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






தெலுங்கு தேசத்தின் தூண்டுதல்:


பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்து கேட்புகளுக்குப் பிறகே அம்பேத்கர் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது என்றும், தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலின் பேரில்தான் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுவதாகவும், கலவரங்கள் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.