நாட்டின் பெட்ரோல்,டீசல் உற்பத்தியானது அதிகரிக்கும் எந்த தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் போதிய அளவிற்கும் கூடுதலாகவே உள்ளது என்று மத்திய எண்ணெய் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்களில் நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் அதிகரித்தது. அது பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிறிய கால தாமதத்திற்கும்  வழிவகுத்தது. இதன் காரணமாக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் விநியோகத் தட்டுப்பாடு இருப்பதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சந்தேக, யூகப் பேச்சுக்கள் எழுந்தன. அது உண்மையல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.


உண்மை நிலவரம் என்ன?


கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் சில மாநிலங்களில் இருந்த பெட்ரோல், டீசல் எரிபொருள் தேவையானது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 50% அதிகரித்துள்ளது.


இதுதான்  உண்மை. குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் இந்த நிலைமை காணப்படுகிறது. இந்த  மாநிலங்களில் பெருமளவிலான விநியோகம் தனியார் சந்தை நிறுவனங்களுக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களால் செய்யப்படுகிறது. மேலும், டிப்போக்களுக்கும், விநியோக இடங்களுக்கும், இடையிலான தூரமும் அதிகமாக உள்ளது.


இந்நிலையில், அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்கு நாட்டின் பெட்ரோல், டீசல் உற்பத்தி போதிய அளவிற்கும் கூடுதலாகவே உள்ளது. ஒரு சில பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் டிப்போக்கள் மற்றும் விநியோக முனையங்களில் கையிருப்பை அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கூடுதலாக டேங்கர் லாரிகளை இயக்கி வருகிறது.


நாட்டின் பெட்ரோல்,டீசல் உற்பத்தியானது அதிகரிக்கும் எந்த தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் போதிய அளவிற்கும் கூடுதலாகவே உள்ளது.


இவ்வாறு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.




விற்பனை அதிகரிப்பு:


HPCL  எண்ணெய் நிறுவனம் பகிர்ந்த ட்வீட்டில், ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது மே மாதத்தில் பெட்ரோல்,  விற்பனை 41% அதிகரித்துள்ளது. டீசலின் தேவை 32 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் விற்பனை 40.6 சதவீதமும் டீசல் விற்பனை 46.1 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.


அதே வேளையில், சில்லறை சந்தையில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் தேவையை தங்கு தடையின்றி நிவர்த்தி செய்யும் அளவிற்கு தேவையான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்றும் HPCL  எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.