ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. 
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற ஜூலை 18ல் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தேர்தல் தேதியும், வாக்குப்பதிவு முறையும்:


தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற ஜூலை 18ல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் ஜூலை 2 ஆம் தேதி மனுக்கள் சரிபார்க்கப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தலில்  776 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 4,033 மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி உடையவர்கள். அவர்களின் வாக்கு மதிப்பு ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 


அதன்படி ஜனாதிபதி தேர்தலின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு மொத்த மதிப்பில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 49% ஆக உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23% வாக்குகள் உள்ளன. இத்தகைய சூழலில் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று பாஜகவே எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஜனாதிபதித் தேர்தலிலேயே பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. 






மம்தாவின் முயற்சி:


ஜனாதிபதி தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 22 கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்றே புறக்கணிப்பதாக சொல்லிவிட்டது. இன்று காலை டிஆர்எஸ் கட்சியும் புறக்கணித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் புறக்கணித்துவிட்டார். மொத்தம் 5 கட்சிகள் புறக்கணிக்க 17 கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன.


நோ சொன்ன பவார்:


கூட்டத்துக்குப் பின் பேசிய மம்தா, ஜனாதிபதி தேர்தலில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். வேட்பாளராக சர்த்பவாரை போட்டியிட முடிவு செய்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் விவாதித்தோம் என்று கூறியுள்ளார்.