ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கில் அண்மையில் ஜாமீனில் வெளிவந்துள்ள சர்ச்சைக்குரிய இந்துத்துவவாதியான யதி நரசிங்கானந்த், வரும் பத்தாண்டுகளில் நாடு "இந்துக்கள் இல்லாதவர்களாக" மாறுவதைத் தடுக்க அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு இந்துக்களை வலியுறுத்தியுள்ளார். காசியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலின் தலைமைப் பூசாரியான இவர் டிசம்பர் மாதம் ஹரித்வாரில் இந்துக்கள் மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என வெறுப்பு பேச்சைப் பேசினார்.இது பல்வேறு தரப்பினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அவர் அண்மையில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மேலும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைக் கூறியுள்ளார்.
"2029 இல் இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வருவார் என்று அறிஞர்களின் கணிப்புகள் கூறுகின்றன," என்று காசியாபாத் தஸ்னா கோவிலின் தலைமை பூசாரியான யதி கோவர்தனில் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறினார். இருந்தாலும் அவர் எப்படி வந்தார் ஜாமீனில் வெளிவந்தார் என்பதை விவரிக்கவில்லை.
அப்படி ஒருமுறை, இந்து அல்லாத ஒருவர் பிரதமரானால், அடுத்த 20 ஆண்டுகளில், இந்த நாடு 'இந்து-விஹீன்' (இந்து இல்லாத) நாடாக மாறும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்துத்துவா உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய அவர் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 14 வரை மதுரா-கோவர்தன் பகுதியில் தர்ம சன்சத் கூட்டம் நடத்தப்படும் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17-19 தேதிகளில் ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசியதாகவும் தர்ம சன்சத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டு நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் நடந்த 'இந்து மகாபஞ்சாயத்' நிகழ்ச்சியிலும் பங்கேற்று, ஒரு முஸ்லீம் இந்தியாவின் பிரதமரானால், 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்றும், இந்துக்களை ஆயுதம் ஏந்துமாறும் அறிவுறுத்தினார். தங்கள் இருப்புக்காக போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக டெல்லி அரசு கூறி இருந்தது.ஆனால் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வைத் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.