Watch Video: கோயில் திருவிழாவின் போது திடீரென யானைக்கு மதம் பிடித்து யானை தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.


மதம் பிடித்த யானை:


கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்றிரவு ஒரு கோயிலில் நடந்த திருவிழாவின் போது,  யானை ஒன்றிற்கு திடீரென மதம்பிடித்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 17 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். யானை மதம்பிடித்து பக்தர்களை தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






யானை தாக்கும் வீடியோ வைரல்:


திரூரில் நடந்த புதியங்கடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அதுதொடர்பான வீடியோவில், திருவிழாவில் ஐந்து யானைகள் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு யானைக்கு திடீரென்று மதம்பிடிக்க, தலையை கோபமாக வீசியபடி கூட்டத்திற்குள் நுழைந்தார். இதனை கண்டதும் மக்கள் அலறி அடித்து ஓடினர். இதில் நிலைதடுமாறி இருவர் யானையின் காலில் கீழே சிக்கினர். அவர்களில் ஒருவரை தும்பிக்கையால் பிடித்து தூக்கிய யானை, காற்றில் வீசி தூக்கி எறிந்தது” இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படுகாயமடைந்த அந்த நபர் ஸ்ரீகுட்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



அந்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் கொட்டக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பீதியில் மக்கள் அலறி அடித்து ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தான் பலர் காயமடைந்துள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு, யானை இயல்பு நிலைக்கு திரும்பியது.