Priyanka Gandhi Hospitalized: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடை பயணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாரத் ஜடோ நியாய யாத்திரை:
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.
மணிப்பூரில் யாத்திரையை தொடங்கிய அவர், தற்போது பீகார் மாநிலத்தில் சென்றிருக்கிறார். கடந்த சில தினங்களாக அவர் நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுடன் பீகார் மாநிலத்தில் அவருடைய நடைபயணம் முடிவடைகிறது.
இன்று காலை பீகார் மாநிலம் சசராமில் ராகுல் காந்தியை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் அவரை வரவேற்றார். அதன்பின், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, உத்தர பிரதேசத்திற்கு செல்ல இருக்கிறார் ராகுல் காந்தி.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா காந்தி:
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக உத்தர பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை உத்தர பிரதேச வரும் ராகுல் காந்தியுடன் பாத் ஜடோ நியாய யாத்திரையில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தார் பிரியங்கா காந்தி.
இந்த நிலையில் தான், பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "நான் இன்று உ.பி.யில் பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பங்கேற்பதாக இருந்தேன்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என் உடல்நிலை சரியானதும் யாத்திரையில் பங்கேற்பேன். யாத்திரையில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். என் இனிய சகோதரர் சந்தௌலி பகுதியை அடைந்து வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க