மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயரை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு:
இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்படும் என அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி முதலமைச்சர் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறி பாஜக உறுப்பினர்கள் தங்களை அணுகியதாக இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் என்னிடம் கூறினர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலும் பலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் எம்எல்ஏக்களிடம் தெரிவிக்கப்பட்டது. பாஜகவில் சேர, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 25 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர்.
டெல்லியில் 'ஆபரேஷன் லோட்டஸ்':
ஆனால், பணம் வேண்டாம் என எம்.எல்.ஏ.க்கள் என தெரிவித்தனர். மற்ற எம்எல்ஏக்களிடம் பேசியபோது, அவர்கள் 21 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ளவில்லை என தெரிய வந்தது. 7 பேரை மட்டுமே தொடர்பு கொண்டுள்ளனர். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர ஆபரேஷன் லோட்டஸை அமல்படுத்த முயற்சிக்கின்றனர்.
மதுக்கொள்கை ஊழல் மோசடியே அல்ல. மற்ற மாநிலங்களில் உள்ளது போல் பொய் வழக்குகள் போட்டு எங்கள் கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி என்பது தெளிவாகிறது. இவர்களின் நோக்கம் விசாரணை நடத்துவது அல்ல, மதுபானக் கொள்கை வழக்கு என்ற போர்வையில் நமது தலைவர்களை கைது செய்வதே.
ஏற்கனவே சிலரை கைது செய்துள்ளார்கள். டெல்லியில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்குத் தெரியும் என்பதால், ஆட்சியைக் கவிழ்ப்பதே அவர்களின் நோக்கம்" என்றார்.