பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 


ஜனவரி 22 ஆம் தேதி முதல் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தரபிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 23ஆம் தேதி, 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், அயோத்தியில் நிறுவப்பட்ட ராமர் சிலை செதுக்கப்பட்ட கல் மைசூரில் உள்ள எச்டி கோட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருப்பினும், 2022 ஆம் ஆண்டு அந்த சிறப்புக் கல்லை தோண்டி எடுத்த ஒப்பந்ததாரருக்கு கர்நாடக அரசு ரூ.80,000 அபராதம் விதித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், நில உரிமையாளர் (70 வயதான விவசாயி ராமதாஸ்), ஹரோஹள்ளி-குஜ்ஜேகவுடனாபுரா கிராமத்தில் உள்ள தனது 2.14 ஏக்கர் நிலத்தை பயிரிடும் நோக்கத்துடன் சமன் செய்ய விரும்பினார்.


இதற்கான ஒப்பந்தத்தை ஸ்ரீனிவாஸ் நடராஜிடம் அவர் கொடுத்தார். ஸ்ரீனிவாஸ் 10 அடிக்கு நிலத்தை தோண்டியபின், ஒரு பெரிய ‘கிருஷ்ண ஷைல’ (மைசூரில் கிடைக்கும் ஒருவகையான கருப்பு நிற கல்) கல்லைக் கண்டுபிடித்தார். அதை மூன்று பாறைகளாகப் பிரித்து வெளியே எடுத்தார். இதற்கிடையில், சில குடியிருப்பாளர்கள் அதைக் கண்டு சுரங்க மற்றும் புவியியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு அனுமதியின்றி கற்களை வெட்டி வெளியே எடுத்த ஸ்ரீனிவாஸுக்கு அபராதம் விதித்தனர். மிகவும் சிரமப்பட்டு அபராதத் தொகையை செலுத்தியதாக ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டிருந்தார். ராமர் சிலைக்கான கற்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 


பின்னர், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், அதே கல்லைத் தேர்ந்தெடுத்து, அயோத்தியில் நிறுவப்பட்ட பிரம்மாண்டமான குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தார். இந்த சிலை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, ஸ்ரீனிவாஸ் செலுத்திய ரூ.80,000 அபராதம் அவருக்கு பாஜக சார்பில் திருப்பி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கல் எடுக்கப்பட்ட நிலத்தின் விவசாயி, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு சிலை வடிவமைக்க அருண் யோகிராஜை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.