பிட் காயின் இளைஞர்களை சீரழித்துவிடும். அதைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


சிட்னி பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய உரை நிகழ்த்தினார். இதில் பிரதமர் மோடி, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புரட்சி குறித்து பேசினார்.  





பிரதமர் பேசியதாவது:


இந்த டிஜிட்டல் உலகம் பல புதிய வாய்ப்புகளை வரவேற்றுள்ளது. வளத்தை நோக்கிய வாய்ப்புகள் அவை. அதே வேளையில், சில ஆபத்துகளும், சிற்சில பூசல்களும் சைபர் ஸ்பேஸில் இல்லாமல் இல்லை. உலக நாடுகளுக்கு இடையே வளர்ச்சிப் போட்டியை தொழில்நுட்பம் தான் நிர்ணயிக்கிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை வெளிப்படைத்தன்மையாகும், அதே சமயம் சுயநலம் கொண்ட ஒரு சிலர் இந்த வெளிப்படைத் தன்மையை தவறாக பயன்படுத்த நாம் அனுமதிக்கக்கூடாது.


ஜனநாயகம் மற்றும் டிஜிட்டலில் தலைவராக உள்ள இந்தியா   பகிரப்பட்ட வளம் மற்றும் பாதுகாப்பில் கூட்டாளிகளுடன் பணியாற்ற தயாராக உள்ளது என்று பிரதமர் கூறினார். “இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி என்பது எங்களின் ஜனநாயகம், எங்களின் மக்கள் தொகை, எங்களின் பொருளாதார நிலை ஆகியவற்றில் வேரூன்றி இருக்கிறது.  கடந்தகால சவால்களை, எதிர்கால பாய்ச்சலுக்கான வாய்ப்பாக நாங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.


இந்தியாவில், 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக பயனாளர்களுக்கு நலத்திட்டங்கள் சேரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்துவரும் புதிய தொழில்கள் சூழலை இந்தியா கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொழில்துறை மற்றும் சேவைகள் துறை மட்டுமின்றி வேளாண்துறையும் கூட மிகப்பெரும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. எதிர்கால இந்தியாவை உருவாக்க  5ஜி, 6ஜி போன்று தொலைத்தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்த நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம். 




தொழில்நுட்ப பயன்பாட்டில் இந்தியாவின் விரிவான அனுபவம் பொது நன்மைக்கான கொள்கை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக அதிகாரமளிப்பு ஆகியவை வளரும் உலகிற்கு மாபெரும் உதவி செய்யமுடியும் 


கிரிப்டோ கரன்ஸி விஷயத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும், நமது இளைஞர்கள் தவறான கைகளுக்கு சென்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியங்கள் பழமையானவை; அதன் நவீன அமைப்புகள் வலுவானவை.  உலகம் ஒரு குடும்பம் என்பதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.


இவ்வாறு பிரதமர் பேசினார்.


பிரதமரின் பேச்சு குறித்து பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கிரிப்டோ கரஸ்ஸி எனப்படும் வர்ச்சுவல் நாணயம், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள், தீவிரவாத கும்பல்களுக்கு நிதி உதவி செய்வோரின் கரங்களில் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அதில் இந்திய அரசாங்கம் உறுதியுடன் இருக்கிறது என்று பிரதமர் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. 


இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது ஆனால் இரண்டாண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் அதன் மீதான தடையை நீக்கியது.