குஜராத்தில் டவ்-தே புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.


அரபி கடலில் உருவான காற்றத்தாழ்வு பகுதி அதிதீவிர புயலாக மாறி  நேற்று அதிகாலை குஜராத்தில் கரையை கடந்தது. இந்தப் புயலுக்கு டவ்-தே புயல் என்று பெயரிடப்பட்டது.


டவ்-தே புயல் மும்பை நகரை புரட்டிப்போட்டது. குஜராத்தின் போர்பந்தர் - மாகுவா இடையே கரையை கடந்தபோது  மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக ஆகிய மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது புயலால் 14 பேர் உயிரிழந்தனர்.


இந்தப் புயலால் குஜராத்தில் பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் புயலுக்கு 7 பேர் பலியாகினர்.  புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.


இந்நிலையில், புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்றார். டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் குஜராத்தின் பவ்நகருக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்று புயல் சேதங்களை  பார்வையிட உள்ளார். இதன்பிறகு, சேதங்கள் குறித்து குஜராத் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.




 


டவ்-தே புயல் என்றால் என்ன? டவ் தே என்ற பெயர் எப்படி வந்தது? அதிதீவிர புயல் என்றால் என்ன?


டவ்-தே என்ற பெயரை மியான்மர் நாடு கொடுத்துள்ளது. அந்த நாட்டு மொழியில் டவ் தே என்றால் கிக்கோ என்ற ஒரு உள்ளூர் பல்லி வகை ஆகும். இந்தப் புயலின் பெயர் ஆங்கிலத்தில் 'Tauktae' என்று இருந்தாலும் இதனை 'டவ் தே' என்று அழைக்க வேண்டும். 


இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை 2004-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதை இந்தியா,பங்களாதேஷ், மாலத்தீவுகள், மியான்மர், ஓமான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து இணைந்து ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி இந்த நாடுகள் அனைத்து தலா 13 பெயர்கள் கொண்ட ஒரு செட் பட்டியலை வெளியிடும். அந்தப் பட்டியலில் இருந்து சுழற்சி முறையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படும். தற்போது டவ் தே என்ற பெயர் மியான்மர் கொடுத்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. 


அதேபோல் புயல்கள் காற்றின் வேகத்தை வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 




    • காற்றழுத்த தாழ்வு பகுதி- காற்றின் வேகம் மணிக்கு 50-61 கிலோ மீட்டர் வரை  இருக்கும்.





    • புயல்- காற்றின் வேகம் மணிக்கு 62-88 கிலோ மீட்டர் வரை இருக்கும்.





    • தீவிர புயல்- காற்றின் வேகம் மணிக்கு 89-117 கிலோ மீட்டர் வரை இருக்கும்.





    • அதிதீவிர புயல்- காற்றின் வேகம் மணிக்கு 118-166 கிலோ மீட்டர் வரை இருக்கும். 





    • கடும் புயல்- காற்றின் வேகம் மணிக்கு 166-221 கிலோ மீட்டர் வரை இருக்கும்.




  • சூப்பர் புயல்- காற்றின் வேகம் மணிக்கு 221 கிலோ மீட்டருக்கு மேல் வீசும்.