18th Lok Sabha First Session: பாஜக அரசு புதிதாக ஆட்சி அமைத்த பிறகு, 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) முதல் தொடங்க உள்ளது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வருகின்ற ஜூலை 3 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பின் இன்று கூடவுள்ள மக்களவை கூட்டத்தொடரில் புதிய எம்.பிக்கள் பதவியேற்கவுள்ளனர். இந்த மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாள்களிலும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 39 எம்.பி.க்கள் வருகின்ற ஜூன் 25ம் தேதியான நாளை பதவியேற்கின்றனர். 

Continues below advertisement

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்பி பார்த்ரிஹரி மஹ்தாப்க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, மஹ்தாப் நாடாளுமன்ற வளாகத்தை அடைந்து காலை 11 மணிக்கு மக்களவை நடவடிக்கைகளைத் தொடங்குவார்.

முதல் கூட்டத்தொடரில் முட்டப்போகும் பிரச்சனைகள்:

நாடாளுமன்றத்தின் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஏழு முறை எம்.பி.யாக இருந்த பர்த்ரிஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளதால், கூட்டத்தொடரின் போது மக்களவையில் அமளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தவிர, பணவீக்கம், கடும் வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், சமீபத்திய தேர்வு முறைகேடுகள், தேர்வு நடத்துவதில் உள்ள குளறுபடிகள் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் மக்களவையில் முதல் குரலாக எழுப்பலாம். 

Continues below advertisement

சிஎஸ்ஐஆர்-யுஜிசி-நெட் தேர்வை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ரத்து செய்தது. இதற்குப் பிறகு, ஒரு நாள் கழித்து, தேசிய தேர்வு வாரியமும் (NBE) நீட் பிஜி தேர்வை ஒத்திவைத்தது.  இதையடுத்து மக்களவையில் இன்று திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணி எம்.பி.க்கள் தெருவில் போராடும் லட்சக்கணக்கான மாணவர்களின் பிரச்சினையை எழுப்புவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, இன்றைய 18வது மக்களவை கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட இருக்கின்றன. 

தற்காலிக சபாநாயகர் பர்த்ரிஹரி மஹ்தாப்-க்கு எதிர்ப்பா..? 

நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்ரிஹரி மஹ்தாப் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மஹ்தாப் ஏழு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளதால், இந்தப் பதவிக்கு தகுதியானவர் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

மக்களவை உறுப்பினராக பிரதமர் மோடி இன்று பதவியேற்பார்:

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் போது சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இதன்பின், மக்களவை பொதுச் செயலாளர் உத்பால் குமார் சிங், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை தாக்கல் செய்வார். இதற்குப் பிறகு, மக்களவை உறுப்பினர் பதவிப் பிரமாணம் செய்யுமாறு மக்களவைத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடியை மஹ்தாப் வலியுறுத்துவார் . இதன் பிறகு, ஜூன் 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் வரை அவை நடவடிக்கைகளை நடத்த அவருக்கு உதவும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட சபாநாயகர்கள் குழுவுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

சபாநாயகர்கள் குழுவில் யார் யார் உள்ளனர்..? 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் மஹ்தாபுக்கு உதவியாக கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), டிஆர் பாலு (திமுக), ராதா மோகன் சிங் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே (பாஜக) மற்றும் சுதீப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.