பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார். இந்த இரண்டு நாள் பயணத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையே இருக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் உடனான நட்புறவை மேம்படுத்துவது, இந்தியாவிற்கான முதலீடுகளை ஈர்ப்பது, பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னேற்றம் காண்பது ஆகிய காரணங்களுக்காக பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தான் அண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதைதொடர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி:
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்கிறார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 14ம் தேதியை தேசிய தினமாகவும், பாஸ்டில் சிறை தகர்ப்பு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அந்த நாளில் பாரிசில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸில் ஒரு சிறப்பு ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இதில் வெளிநாட்டு விருந்தினர்கள் யாருக்கும் இதுவரை அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முதல்முறையாக பிரதமர் மோடி அதில் பங்கேற்க உள்ளார். இதுவரை எந்த உலக தலைவருக்கும் இந்த கவுரவம் கிடைத்ததில்லை என கூறப்படுகிறது.இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் நட்பு ரீதியாக இந்திய முப்படை வீரர்களும் கலந்துக்கொள்கின்றனர்.
மேலும் இந்த பயணத்தில் பிரான்ஸ் நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையே ராணுவ ரீதியாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்திய பிரான்ஸ் நாட்டின் ராணுவ உறவின் 25 ஆம் ஆண்டு என்பதால் பல்வேறு விஷயங்கள் குறித்தும் மேலும் உறவை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு அதிபர், பிரதமர் மோடிக்கு அரசு முறை விருந்து வழங்குகிறார், தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டி பிரதமரையும் சந்தித்து பேச உள்ளார் பிரதமர் மோடி. அந்நாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடு பயணம்:
பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து ஐக்கிய அரபு நாடான் அபுதாபிக்கு செல்கிறார். ஐக்கிய அரபு நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நயானை சந்திக்கிறார். எரிசக்தி, உணவு பாதுகாப்பு, சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாட்டிற்கு ஐக்கிய அரபு நாட்டிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாகவும் பேச்சுவார்ததை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.