3வது முறையாக இந்தியாவின் பிரதமரான மோடி, முதல் அரசு முறை பயணமாக இத்தாலி புறப்பட்டு சென்றார்.
ஜூன் 14 ஆம் தேதி இத்தாலியின் அபுலியாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். உச்சி மாநாட்டுக்கு மத்தியில் இரு தலைவர்களும், இருநாட்டு உறவு குறித்து தனிப்பட்ட வகையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி இத்தாலி பயணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், 14 ஜூன் 2024 அன்று G7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் அந்நாட்டில் உள்ள அபுலியாவுக்கு செல்கிறேன். G-7 உச்சிமாநாட்டிற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தாலி செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2021 ஆம் ஆண்டு G20 உச்சிமாநாட்டிற்காக நான் இத்தாலிக்கு பயணம் செய்ததை நான் அன்புடன் இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். கடந்த ஆண்டு இத்தாலி பிரதமர் மெலோனியின் இந்தியாவிற்கு இரண்டு முறை பயணங்கள் மேற்கொண்டார். இந்தியா-இத்தாலியின் உறவை மேலும் ஒருங்கிணைப்பதற்கும், இந்தோ-பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
உச்சி மாநாட்டு நிகழ்ச்சியில் எனது கலந்துரையாடலின் போது, செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். மேலும் இந்தியாவின் G20 உச்சிமாநாட்டிற்கும், வரவிருக்கும் G7 உச்சிமாநாட்டிற்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், உலகளாவிய தெற்கிற்கு முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அதேசமயம் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.