வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதனின் மறைவிற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்:
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவிற்குஆழ்ந்த இரங்கல். நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது மற்றும் நமது தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. விவசாயத்தில் அவர் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளுக்கு அப்பால், டாக்டர் சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.
ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது. டாக்டர் சுவாமிநாதனுடனான எனது உரையாடல்களை நான் எப்போதும் போற்றி மகிழ்வேன். இந்தியா முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்மாதிரியாக இருந்தது. அவரது வாழ்க்கையும் பணியும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், பின் தொடர்பாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி இரங்கல்:
அளுநர் ரவியும் எம்.எஸ். சுவாமிநாதனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “பசுமைப் புரட்சியின் தந்தையும் நவீன பாரதத்தை உருவாக்கியவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார். துயரமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி!” என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ். சுவாமிநாதன். பசிப்பிணி ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, ஆகிய குறிக்கோள்களுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பண் ஆற்றியவர். கருணாநிதியின் முதலமைச்சராக இருந்தபோது, மாநில திட்டக்குழுவில் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கினார். நீடித்த உணவு பாதுகாப்புக்கு ஆற்றிய பங்களிப்பால் பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவர். சுவாமிநாதனின் இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மிகப்பெரிய ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினர், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி இரங்கல்:
அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். இந்திய ஒன்றியத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு, வேளாண் அறிவியலில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக அவரது ஆய்வுகள் அளித்த பலன்கள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். எம்.எஸ்.சுவாமிநாதனின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.