சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆன பிறகும், இந்தியாவின் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுவது அதன் இளைஞர்கள்தான். இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதால், தேவைக்கேற்ப மனித வளத்தை பயன்படுத்தி கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால், தற்போது அதற்கு மிக பெரிய சவால் வந்திருக்கிறது.


முதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு:


இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், முதியவர்களின் மக்கள் தொகை 41 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2050ஆம் ஆண்டுக்குள், மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் முதியவர்களாக இருப்பார்கள் கணிக்கப்பட்டுள்ளது.


UNFPA தயார் செய்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான இந்தியா முதுமை அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2046ஆம் ஆண்டுக்குள், குழந்தைகளின் (15 வயதுக்கு உட்பட்டவர்கள்) மக்கள் தொகையை விட முதியவர்களின் மக்கள் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வருமானம் இன்றி ஏழ்மையில் தவிக்கும் முதியவர்கள்:


இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், தற்போது இருக்கும் முதியவர்களில் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் ஏழ்மையில் இருப்பதாக UNFPA தெரிவித்துள்ளது. இந்த 40 சதவிகிதத்தில் 18 சதவிகிதத்தினர், எந்த வித வருமானமும் இன்றி தவித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இம்மாதிரியான ஏழ்மை, அவர்களின் வாழ்க்கை தரத்தையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதித்துறை துறை செயலாளர் சவுரப் கார்க், ஐக்கிய நாடுகள் சபை மக்கள் தொகை நிதியத்தின் இந்திய பிரதிநிதி ஆண்ட்ரியா வோஜ்னர் ஆகியோர் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டனர். 


மற்றவர்களை சார்ந்து வாழும் வயதான பெண்கள்:


2022ஆம் ஆண்டு முதல் 2050ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 279 சதவகிதம் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், கைம்பெண்கள் மற்றும் மற்றவர்களை சார்ந்து வாழும் வயதான பெண்களின் சதவகிதம் அதிகம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதே நிலைதான், பல நாடுகளிலும் தொடர்ந்து வருகிறது. ஆண்களை விட பெண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகம் என்றும் 60 முதல் 80 வயது வரையில் அவர்களின் சராசரி ஆயுட்காலம் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையே வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து, முதியவர்கள் மத்தியில் பாலின விகிதமும் (1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்ற விகிதம்) தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஆனால், இதே விகிதம், மொத்த மக்கள் தொகையில் தொடர்ந்து குறைந்து வருகிறது.