எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா
தமிழ்நாடு முழுவதும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படத்திற்கும், சிலைக்கும் அவரது ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து:
மக்களுக்காக உழைத்தவர்:
அந்த வகையில் பிரதமர் மோடி எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது (எக்ஸ்) ட்விட்டர் பக்கத்தில், “தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார்.
அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை:
தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரதரத்னா அமரர் எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று. ஏழை எளிய மக்கள் துயரங்களைப் புரிந்து, நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தியவர். மறைந்தாலும், மறையாப் புகழோடு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர், கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் அது நமது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களைத்தான், ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித் தலைவரின் ஆட்சியில்தான். அவர்கள் குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான்.
புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். புரட்சித் தலைவரின் பெரும் புகழ் இன்னும் பல்கிப் பெருகி வளரும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் மக்கள் உள்ளங்களில் மாமனிதராய், மனிதருள் மாணிக்கமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல தலைவர்களும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.