பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிய, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர். கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் மற்றும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்று, மோடியை மீண்டும் பிரதமராக்க ஆதரவளித்தனர். அதனடிப்படையில், பாஜக கூட்டணியின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி. நட்டா அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்த சட்டசபை மண்டபத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும், நமது ராஜ்யசபா எம்.பி.க்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இங்கு இவ்வளவு பெரிய குழுவை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றி பெற்ற தலைவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இரவும் பகலும் உழைத்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை, இன்று இந்த மைய மண்டபத்தில் இருந்து தலைவணங்கி வணங்குகிறேன்.
இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தின் வலிமையைப் பார்க்கிறீர்கள் - இன்று 22 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். என்னை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ளீர்கள், நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். 2019 இல் இந்த அவையில் நான் பேசும் போது, நீங்கள் அனைவரும் என்னை தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள். இன்றும் நீங்கள் எனக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறீர்கள் என்றால், நம் மத்தியில் இருக்கும் நம்பிக்கையின் பாலம் வலுவாக உள்ளது என்று அர்த்தம். அரசியல் சாசனப்படி அனைத்து மதங்களும் சமம். அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் என்.டி.ஏ உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் வாக்கு சந்தவீதம் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
.