குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதற்காக திரௌபதி முர்மு வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். அவரின் வேட்பு மனுவுக்கு ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சி சார்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 


இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட நபர்களும் வாக்களிக்க உள்ளனர். அத்துடன் தமிழ்நாடு எம்.பிக்களும் வாக்களிக்க உள்ளனர்.


 


ஒடிசாவின் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரான முர்மு, 2015 முதல் 2021 வரை பதவி வகித்தார். இவர் குடியரசுத் தலைவரானால் குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியினப் பெண் என்ற அந்தஸ்தையும் பெறுவார்.


இந்தத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் தவிர நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் அனைவரும் வாக்களிக்க உள்ளனர். இதற்காக அனைத்து மாநில சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு மேற்கொள்ள ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. 


சிவசேனா ஆதரவு:


தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்திருந்தது. இதனையடுத்து யஷ்வந்த் சின்ஹா தனது மும்பை பயணத்தை ரத்து செய்துள்ளார். அவர் மும்பை சென்று மகா விகாஸ் அகதி கூட்டணித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவதாக இருந்தார். உத்தவ் தாக்கரே, சிவசேனா திரெளபதி முர்முவை ஆதரிக்கும் என்று கூறினார். இதற்கு அவர் காரணமாக முதன்முறையாக ஒரு பழங்குடியினப் பெண் போட்டியிடுவதால் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டுமென்றார். அதேபோல் தனது கட்சியின் எம்எல்சி அமஷ்ய பாட்வி, முன்னாள் எம்எல்ஏ நிர்மலா கவித், சிவாஜிராவ் தவாலே ஆகியோர் தன்னிடம் சிவசேனா முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று கோரியதாலும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண