இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக வரப்போவது யார் என்பது குறித்து பரபரப்பு இன்று மதியம் மூன்று மணி முதல் தொற்றிக் கொண்டது. சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உட்பட 14 பேர் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். 


தேர்தல் அறிவிப்பு


மாண்புமிகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24- ம் தேதியுடன் முடிவடைவதால், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இன்று முறைப்படி வெளியிடப்பட்டது. அதன்படி, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், வரும் 15-ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவதாக அறிவித்தார். 


ஜூன் 29-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் என்றும் வேட்பு மனுக்கள் வரும் 30ம் தேதியே சரிபார்க்கப்படும் என்றும் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அதன்பின், ஜூலை 2-ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அதன்பிறகு,  போட்டியிருந்தால், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 21-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து, ஜுலை 25-ம் தேதி புதிய ஜனாதிபதி (அ) குடியரசுத் தலைவர் பதவியேற்பார் என்று தேர்தலை நடத்தும் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


தேர்தல் நடத்தும் முறை:


ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்த எலக்டோரல் காலேஜ் எனும் தேர்தல் குழு  தான் தேர்ந்தெடுக்கும். இந்த முறையும், அதே முறையில்தான் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.  வேட்புமனு ஏற்கப்படுவதற்கு, 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம்  மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




MP - MLA-வின் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?


ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.  தற்போதைய நிலையில், மக்களவை, மாநிலங்களவையும் சேர்த்து 776 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு என்பது 5 லட்சத்து 43 ஆயிரத்து 700 ஆகும்.  நாடு முழுவதும் தற்போது 4,033 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால், இவர்களின் வாக்குகளின் மதிப்பு என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். 


அதாவது, மாநிலத்திலுள்ள மக்கள்தொகையின் அடிப்படையில்தான், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு  மதிப்பிடப்படுகிறது.  உதாரணத்திற்கு, உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 என்றால், அது கோவா போன்ற சிறிய மாநிலத்தில், 20 தான். அந்தவகையில், தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டுமதிப்பு 176.  தற்போதைய நிலையில், அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு, 5 லட்சத்து 42 ஆயிரத்து 731 ஆகும்.


மொத்த வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா? 


அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆகும். இதில், 50 சதவீதத்துக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தற்போதைய நிலையில், 49 சதவீத வாக்குகள்தான் உள்ளன. எனவே, ஒருசதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற எதிர்க்கட்சிகள் அல்லது கூட்டணியில் இல்லாத கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் ஆதரவு மிக முக்கியம். அதைப் பெறுவதற்கான கணக்குகள்தான் தற்போதே தொடங்கிவிட்டன.





காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வியூகம்:


பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தரப்போ யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என இதுவரை எந்த முன்னெடுப்பும் இல்லை. அது மட்டுமின்றி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் ஆகியோருடன் இது தொடர்பான பேச்சினை விரைவில் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள் அனைத்தையும் சேர்த்து பொது வேட்பாளரை அறிவிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தேசியவாத கட்சியைச்சேர்ந்த இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத் பவாரை நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.



பிரதமர் மோடியின் கணக்கு:


பிரதமர் மோடியை பொறுத்தமட்டில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே, யாரும் எதிர்பாராத வகையில், தலித்  சமூகத்தைச்  சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை வேட்பாளராக அறிவித்து, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். இந்த முறையும், 42 லோக்சபா இடங்களைத் தரக்கூடிய பழங்குடிகளின் ஆதரவை முழுமையாக நாடு முழுவதும் பெறுவதற்காக, பழங்குடி வேட்பாளரை தேர்வு செய்ய ஒரு திட்டமும், மதசார்பற்ற கட்சியாகத்தான் பாஜக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில், ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக அறிவிக்க மற்றொரு திட்டமும் வைத்திருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.




திலும்,ஜார்க்கண்ட மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த பழங்குடியைச் சேர்ந்த த்ருபதி முர்மு-வை (Draupadi Murmu) என்பவரை வேட்பாளராக அறிவித்தால், அவர் பெண் என்பதாலும், எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து பெற முடியும் என நம்புவதாக தகவல்கள் வருகின்றன. மறுபக்கத்தில், அண்மையில் நபி தொடர்பாக எழுந்த சர்ச்சையால், தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி ஆளும் பாஜக என உலக அளவில் பேசப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்லாமியரான  ஆரிப் முகம்மது கானை (Arif Mohammed Khan) வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 


ஆளும் பாஜக-வின் திட்டம்:


பிரதமர் மோடியின் கருத்தோட்டத்திற்கு ஏற்ப, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலான ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.  அவருக்கு உரிய ஆதரவை பெறுவதற்காக, எதிர்க்கட்சிகளாக இருக்கும் ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட சில கட்சித் தலைவர்களுடன் மறைமுகமாக பேச்சு நடத்தி வருகின்றனர். 


எது எப்படியோ, இன்னும் ஒரு மாதத்திற்கு ஜனாதிபதி தேர்தல் கணக்குகளும் நகர்வுகளும் இந்திய அரசியலை சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் வைத்திருக்கும் என்பது நிதர்சனம். எனவே, அடுத்த மாதம் 25-ம் தேதி பதவியேற்கப்போகும்,  இந்தியாவின் 15-வது ஜனாதிபதி  யார் என்பது, தேர்தல் இருந்தால், அடுத்த மாதம் 21-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தெரிந்துவிடும் என்பது உறுதி.