கடந்த 45 நாள்களுக்கு மேலாக மணிப்பூரில் இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை.


மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி?


மற்ற நடவடிக்கைகள் எதுவும் பயன் தரவில்லை என்றால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை எனக் கூறப்படுகிறது. மாநில நிர்வாகமும் பாதுகாப்பு படைகளும் பாரபட்சத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது.


குகி பழங்குடி சமூக மக்கள் மீது மாநில காவல்துறை திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக அச்சமூகத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் பாஜக அரசு மீது அக்கட்சியை சேர்ந்த குகி பழங்குடி சமூக எம்எல்ஏக்களே புகார் அளித்திருப்பதுதான்.


அதே சமயத்தில், குகி சமூகத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு அசாம் ரைபிள்ஸ் படை பிரிவு வீரர்கள் உதவுவதாக மெய்டீஸ் சமூக மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சூழலில், முதலமைச்சர் பதவியில் பைரன் சிங் தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


முதலமைச்சர் பதவியில் இருந்து பைரன் சிங் நீக்கமா?


ஆனால், இந்த சமயத்தில், பைரன் சிங்கை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கினால் அவர் சார்ந்த மெய்டீஸ் சமூக மக்கள், இன்னும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வார்கள்.


இதுகுறித்து பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "பைரன் சிங்கின் நீக்கம் மெய்டீஸ் சமூகத்தினரை அந்நியப்படுவதற்கு வழிவகுக்கும். வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெற வைக்க மத்திய அரசு கடும் உழைப்பை மேற்கொண்டது. ஆனால், தற்போது குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதன் மூலம் அந்த சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது போல மக்கள் நினைப்பார்கள்" என்றார்.


அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வாஷிங்டனில் போராட்டம் நடத்த மெய்டீஸ் சமூக அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, ஜூன் 22ஆம் தேதி, வாஷிங்டனில் உள்ள Lafayette பூங்காவில் போராட்டம் மேற்கொள்ளப்படும் என மெய்டீஸ் சங்கம் அறிவித்துள்ளது.


மணிப்பூரில் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை குகி பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.