தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு நடத்த மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துரை சார்பில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்ந்த வாரியமான ‘கபா’ தமிழ்நாடு அரசு கேட்ட அகழாய்வு பணிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதையடுத்து சிவகங்கை மாவட்டம் கீழடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவ்ட்டம் துலுக்கர்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்பதூர், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை மற்றும் நத்தம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், விரைவில் தமிழ்நாடு தொல்லியல்துறை அகழாய்வு பணிகளை தொடங்க இருக்கிறது. 


கைவிடப்பட்ட அகழாய்வு பணிகள்: 


ஏற்கனவே, சிவங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல துறை சார்பில் 3 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து ஆதாரங்கள் கிடைத்த நிலையிலும், போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி மத்திய அரசு அகழாய்வு பணியை கடந்த 2017ல் கைவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அன்றைய அதிமுக ஆட்சியில் தமிழக தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வு பணியை மேற்கொண்டது. அதில் கிடைத்த ஆதாரங்களை அமெரிக்காவின் பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்ததில், கீழடி நாகரிகம் என்பது சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது.


அதே நேரத்தில், சங்க காலமும் மேலும் 300 ஆண்டுகள் பின்னோக்கி சென்று, கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்று தமிழ்நாடு அரசு நிறுவியது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி தொடர்பான ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளார். அதில், சங்க காலம் என்பது மேலும் 500 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கி.மு. 8ஆம் நூற்றாண்டு என நிறுவியுள்ளார்.


இதனால், அசோகர் காலத்திற்கு முன்னரே தமிழர்களின் சங்க காலம் இருந்தது என்பதும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகவே இலக்கியம் படைக்கும் ஆற்றலுடன் தமிழர்கள் இருந்தனர் என்பதும் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


முதல் சங்கம்:


சங்க காலம் என்பது முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்களை கொண்டதாக இருந்தாலும் இப்போது கிடைத்திருக்கும் அகழாய்வு ஆதாரங்கள் அனைத்தும் கடைச் சங்கத்தை சார்ந்தது என்பதால், இடை மற்றும் முதல் சங்கங்கள் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.


முதல் சங்கம் கடல்கொண்ட தென்மதுரையிலும், இடைச் சங்கம் கபாடபுரத்திலும் இருந்ததாக இலக்கியங்கள் கூறும் நிலையில், தமிழ்நாட்டில் அகழாய்வுகளை விரிவுப்படுத்தும்போது இந்த இரு சங்கங்கள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளன. அதனால், தமிழ்நாடு அரசு அகழாய்வு பணிகளை முடக்கி விட்டுள்ளது. 


திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழ்ந்த சுவடுகள் கொண்ட பர்மா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் அகழாய்வு பணிகள் அந்தந்த நாடுகளின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  அதோடு, இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்தசூழலில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.