77ஆவது சுதந்திர தினம், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், "77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நம் அனைவருக்கும் ஒரு மகிமையான, மங்களகரமான சந்தர்ப்பமாகும்.
"பாரத மாதாவுக்காக இன்னுயிரை தியாகம் செய்தனர்"
கொண்டாட்டம் உணர்வு காற்றில் பரவுவதை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில், இந்தியாவில் எல்லா இடங்களிலும் உள்ள அனைவரும் எப்படி உற்சாகமாக இந்த சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாராகிறார்கள் என்பதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெறுவதற்கு, தியாகம் செய்த அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்துவதில் எனது சக குடிமக்களுடன் இணைந்து கொள்கிறேன்.
மாதங்கினி ஹஸ்ரா, கனக்லதா பருவா போன்ற சிறந்த பெண் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாரத மாதாவுக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். கடினமான சத்தியாகிரகப் பாதையில் ஒவ்வொரு அடியிலும் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு இணையாக அவரது மனைவி கஸ்தூர்பா போராடினார்.
"பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம்"
நமது நாட்டில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார வளர்ச்சி குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது. பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சக குடிமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நமது சகோதரிகள் மற்றும் நாட்டின் மகள்கள் துணிச்சலான சவால்களை வென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களில் பெண்களின் வளர்ச்சியும் முக்கிய அங்கமாக இருந்தது.
இன்று, இந்தியா உலக அரங்கில் தனக்கான சரியான இடத்தைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், சர்வதேச ஒழுங்கிலும் தனது நிலையை உயர்த்தியிருப்பதைக் காண்கிறோம். உலகம் முழுவதும் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான இலக்குகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
"சரியான திசையில் செல்ல ஜி-20 தலைமை பதவி தனித்துவமான வாய்ப்பு"
சர்வதேச மன்றங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஜி-20 தலைமை பதவி. G-20 அமைப்பு, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துவதால், உலகளாவிய உரையாடலை சரியான திசையில் செல்ல இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.
ஜி-20 அமைப்புக்கு தலைமை பதவி வகிப்பதால், சமமான வளர்ச்சியை நோக்கி வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் சரியான முடிவுகளை எடுக்க இந்தியா வலியுறுத்தும்.
வர்த்தகம் மற்றும் நிதிக்கு அப்பால், மனித வளர்ச்சி விவகாரங்களிலும் திட்டம் உள்ளன. உலகளாவிய பிரச்னைகளைக் கையாள்வதில் இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவத்துடன், உறுப்பு நாடுகள் இந்த முனைகளில் பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.