75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் ஜி20 உச்சி மாநாடு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினார். பாரத ரத்னா விருது பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் குறித்தும் அவர் பேசினார். அவரது உரையில் இடம் பெற்ற கருத்துக்களை இங்கு காணலாம்.
1. நாளை அரசியலமைப்பின் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதை கொண்டாடும் நாள். அதன் முன்னுரையில் நாம், இந்திய மக்கள் என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருப்பொருள் ஜனநாயகத்தை எடுத்துக்காட்டுகிறது.
2. இந்தியாவில், ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தின் கருத்தை விட மிகவும் பழமையானது. அதனால்தான் இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், தேசம் அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் உள்ளது. இது மாற்றத்தின் காலம். நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான பொன்னான வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இலக்குகளை அடைய ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முக்கியமானது.
3. அயோத்தியில் கட்டப்பட்ட புகழ்பெற்ற ராமர் கோவில் திறக்கப்பட்டதை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, வருங்கால வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் நாகரீக பாரம்பரியத்தை தொடர்ந்து மீண்டும் கண்டுபிடிப்பதில் ஒரு முக்கிய அடையாளமாக கருதுவார்கள். ராமர் கோவில் கட்டுமானப்பணி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு தொடங்கியது. இப்போது அது ஒரு பிரமாண்டமான கட்டிடமாக நிற்கிறது, இது மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல, நீதித்துறை செயல்பாட்டில் மக்களின் மகத்தான நம்பிக்கைக்கு ஒரு சான்றாகவும் இருக்கிறது.
4. வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியபோது, பாலின சமத்துவம் என்ற இலட்சியத்தை நோக்கி நாடு மேலும் முன்னேறியுள்ளது. நாரி சக்தி வந்தான் ஆதினியம் (33 சதவீத இட ஒதுக்கீடு) பெண்களின் அதிகாரமளிப்பதற்கான ஒரு புரட்சிகர திட்டமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது நாட்டின் நிர்வாகத்தின் செயல்முறைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் பெண்கள் அதிகமாக ஈடுபடும்போது, அவை வெகுஜனங்களின் தேவைகளுக்கு ஏற்றதாக அமையும்.
5. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் மிக உயர்ந்ததாக உள்ளது, மேலும் இந்த செயல்திறன் 2024 மற்றும் அதற்குப் பிறகு தொடரும் என்றும் நாம் நம்பலாம். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் வழி கற்றல் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் கவலைக்குரிய விஷயங்கள் நடப்பதற்கு சாத்தியங்கள் இருந்தாலும், இளைஞர்களுக்கு பல வாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகும்.
அவர்கள் புதிய எல்லைகளை ஆராய்ந்து வருகின்றனர். அவர்களின் பாதையில் உள்ள தடைகளை நீக்கி, அவர்களின் முழு திறனையும் வெளிக்கொணர நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்...இளைஞர்கள் விரும்புவது அதே சமத்துவத்தின் பழைய சொல்லாடல்களை அல்ல, மாறாக நமது நேசத்துக்குரிய சமத்துவ இலட்சியத்தை உணர்தல். .
6. சந்திரன் பயணம், சோலார் எக்ஸ்ப்ளோரர் ஆதித்யா எல்1, எக்ஸ்போசாட் எனப்படும் நுட்பமான விண்வெளி ஆய்வு எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள் ஆகியவற்றின் மூலம் விண்வெளியில் இந்தியாவின் ஆராய்ச்சிகள் பாராட்டுக்குரியவை. நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்பை விட மிக உயர்ந்த இலக்கை அடைந்துள்ளார்கள்.
7. G20 உச்சி மாநாடு இந்தியாவின் உலகளாவிய தெற்கின் குரலாக வெளிப்படுவதற்கு ஊக்கமளித்தது, சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறும் காரணியாக அமைந்துள்ளது.
8. நமது விளையாட்டு வீரர்கள், புதிய நம்பிக்கையை நமது நாட்டிற்கு அளித்துள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நடந்து முடிந்த சர்வதேச போட்டிகளில் பதக்கப் பட்டியலில் நமது விளையாட்டுப் வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த நாடுமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களில், 46 பதக்கங்கள் வீராங்கனைகள் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 100 மற்றும் அதற்கு மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
9. புதிய கல்விக் கொள்கை (NEP) டிஜிட்டல் உலகில் அனைவரையும் இணைக்கும் பாலமாக உள்ளது.
10. இந்திய அரசாங்கம் நலத்திட்டங்களை விரிவுபடுத்தி மேம்படுத்தியது மட்டுமின்றி, நலன் என்ற எண்ணத்தையே மறுவரையறை செய்துள்ளது. வீடற்றவர்கள் அரிதாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறும்போது, அது நம் அனைவருக்கும் பெருமையான நாளாக இருக்கும் என தனது குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.