குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,  முதல் முறையாக அயோத்தி கோயிலுக்குச் செல்கிறார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


குடியரசுத் தலைவரின் முதல் பயணம்:


உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு  கும்பாபிஷேகமானது,  கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து,  இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.கும்பாபிஷேகத்தின்போது, பிரதமர் , அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட போதும் குடியரசுத் தலைவர் பங்கேற்காதது பெரும் பேசு பொருளானது. இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு,  இன்று குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குடியரசு தலைவர் வருகையையொட்டி கோயில் பகுதிகளில் பலகட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


”அழைப்பு விடுக்கப்பட்டது”:


இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, கும்பாபிஷேகத்தின்போது குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கூறுவது "முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது மற்றும் தவறானது" என்று நிராகரித்தார், இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.