கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது.


இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீரென ஆய்வு மேற்கொண்டது. பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆய்வு மூன்று நாள்கள் நடந்த நிலையில், நேற்று முடிவடைந்தது.


பயமும் பாரபட்சமும் இன்றி தொடர்ந்து செய்தி வெளியிடுவோம்:


ஆய்வு முடிந்த பிறகு விளக்கம் அளித்து பிபிசி செய்தி நிறுவனம், "வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறியுள்ளனர். நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்.


விரைவில், பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என தெரிவித்தது. மேலும், எந்த வித பயமும் பாரபட்சமும் இன்றி தொடர்ந்து செய்தி வெளியிடுவோம் என கூறியிருந்தது. 


இந்நிலையில், ஆய்வு குறித்து முதல்முறையாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ள வருமான வரித்துறை, நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளால் வெளியிடப்பட்ட வருமானம் மற்றும் லாபங்கள் இந்தியாவில் உள்ள செயல்பாடுகளின் அளவோடு பொருந்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.


ஆவணங்களில் முரண்பாடுகள்:


பிபிசியின் பெயரை குறிப்பிடாமல் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்வேறு ஆதாரங்களை வருமான வரித்துறை சேகரித்துள்ளது. ஒரு முக்கிய சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஊழியர்களின் அறிக்கைகள், டிஜிட்டல் கோப்புகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் பணியில் இன்னும் ஈடுபட்டுள்ளோம்.


கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, குழுவின் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வருமானமாக வெளிப்படுத்தப்படாத சில பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. ஆய்வு நடத்தியதன் மூலம் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 


பன்னாட்டு நிறுவனத்தின் ஒரு கிளை, மற்றொரு கிளை நிறுவனத்தின் பொருட்கள், சேவைகள் மற்றும் அறிவுசார் சொத்துக்காக பணம் செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஊழியர்கள் விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சிகளை பயன்படுத்தினர்" என தெரிவித்துள்ளது.


அரசியல் பழிவாங்கும் செயல்:


பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம் வெளியிட்டதற்கு அரசியல் பழிவாங்கும் செயலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விமர்சனம் மேற்கொண்டுள்ளனர்.


ஆய்வு குறித்து வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. அதிகாரிகளிடம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம், இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்திற்கு முற்றிலமாக தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.