ஜார்கெண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நிலுவை தொகையை செலுத்தாததால் எடுத்துச்செல்லப்பட்ட டிராக்டரில் சிக்கி கர்பிணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சாக் காவல் நிலையத்திற்குட்பட்ட பரியநாத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் மேத்தா. மாற்றுத்திறனாளியான இவர் தனக்கு சொந்தமாக மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து , மாத தவணையில் டிராக்டர் ஒன்றினை வாங்கியுள்ளார். இதற்கு சில மாதங்கள் நிலுவை தொகை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் மேத்தாவிற்கு கடந்த வியாழக்கிழமை வார்னிங் மெசேஜ் வந்திருக்கிறது. அதில் “ நிலுவை தொகையான 1.3 லட்சம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும்” அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் மீட்பு முகவர்களிடம் இருந்து வந்த அழைப்பை மேத்தா ஏற்றிருக்கிறார். அதில் “ உடனடியாக பணத்தை செலுத்தாவிட்டால் NH-33ல் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிராக்டரை உடனடியாக பறிமுதல் செய்துவிடுவோம் “ என மிரட்டியுள்ளனர். இதனால் டிராக்டரை மீட்க மிதிலேஷ் மேத்தா விரைந்திருக்கிறார். ஆனால் அதற்குள்ளாக டிராக்டரை அங்கிருந்து எடுத்துச்சென்றிருக்கின்றனர்.
பின்னர் மீட்பு முகவர்களை பிந்தொடர்ந்து தன்னிடம் 1.2 லட்சம் ரூபாய் இருக்கிறது. அதனை இப்போது செலுத்தி விடுகிறேன். மீதமுள்ள பணத்தை அடுத்த மாதம் செலுத்திவிடுவேன் என மிதிலேஷ் மேத்தா கூறியதாக தெரிகிறது. ஆனால் மொத்த பணத்தையும் உடனடியாக செலுத்தியே ஆக வேண்டும் என மீட்பு முகவர்கள் திட்டவட்டமாக கூறி அங்கிருந்து டிராக்டரை எடுத்துச்சென்றுள்ளனர். இதனை அறிந்த மேத்தாவின் 27 வயது கர்பிணி மகள் , டிராக்டர் பின்னாலேயே ஓடிச்சென்றிருக்கிறார். இதில் நிலைத்தடுமாறி விழுந்தவர் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவர் 3 மாதம் கர்பிணியாகவும் இருந்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் , பெண்கள் , உறவினர்கள் என பலரும் ஹசாரிபாக் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்ணின் உடலை வைத்துக்கொண்டு நிதி நிறுவனத்தின் மேலாளர் மற்றும் மீட்பு முகவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் செய்துள்ளனர்.மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்ததையடுத்து 2 மணி நேரம் போராட்டம் கைவிடப்பட்டது.மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைந்துள்ளோம்... இந்த துயரத்தின் தருணத்தில் நாங்கள் குடும்பத்துடன் நிற்கிறோம். மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் நிதி வசூல் செய்யும் நடைமுறைகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் “ என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே கூறுகையில், இந்த சம்பபம் தொடர்பாக தனியார் நிதி நிறுவனத்தின் மீட்பு முகவர் மற்றும் மேலாளர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.