ஒடிசா மாநிலம் பரிபாடா நகரில் உள்ள மகாராஜா ஸ்ரீ ராமச்சந்திர பஞ்சதேயோ பல்கலைக்கழகத்தின் 12ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பங்கேற்றதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


குடியரசு தலைவர் பேசும்போது பவர்கட்:


மாணவர்கள், பேராசிரியர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் திரௌபதி முர்மு உரையாற்றி கொண்டிருந்தபோது, அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. உரையாற்ற தொடங்கிய சில நிமிடங்களிலேயே மின்தடை ஏற்பட்டபோதிலும், மைக்கில் எந்த பாதுப்பும் ஏற்படாததால், குடியரசு தலைவரால் தனது உரையை தொடர முடிந்தது.


காலை 11:56 தொடங்கி 12:05 வரை கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் வரை, பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் தடைப்பட்டது. மைக்கை போன்றே, ஏர் கண்டிஷனிங் அமைப்பும் தொடர்ந்து வேலை செய்தது.


மின்தடை காரணமாக எதிரில் இருப்பது என்னவென்று கூட தெரியாத போதிலும், திரௌபதி முர்முவின் உரையை அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அப்போது பேசிய குடியரசு தலைவர், "மின்சாரம், கண்ணாமூச்சி விளையாடுவதாக" நகைச்சுவையாக பேசினார்.


மின்தடை ஏற்பட்டதற்கு காரணம் என்ன?


குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள வடக்கு ஒடிசா பவர் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கர் சர்க்கார், "வளாகத்தில் விநியோக இடையூறு எதுவும் இல்லை. மின் வயரிங்கில் சில குறைபாடுகள் காரணமாக கோளாறு ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.


இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார் திரிபாதி, "துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். என்னை நானே குற்றம் சாட்டுகிறேன். மின்வெட்டுக்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்நிகழ்ச்சிக்கான ஜெனரேட்டரை அரசுக்கு சொந்தமான தொழில் வளர்ச்சிக் கழகம் வழங்கியது. மின்சார பற்றாக்குறைக்கான காரணத்தை அவர்களிடம் கேட்போம்" என்றார்.


ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரௌபதி முர்மு, கடந்தாண்டு ஜூலை மாதம், நாட்டின் குடியரசு தலைவராக பதவியேற்றார். பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரிப்பது இதுவே முதல்முறை. பிரதிபா பாட்டிலை அடுத்து இரண்டாவது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையும் இவரையே சாரும். 


குடியரசு தலைவராவதற்கு முன்பு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தவர் முர்மு. அதற்கு முன்பு வாழ்க்கையில் பல வேதனைகளை அவர் சந்தித்திருக்கிறார். மிக குறுகிய காலத்தில் இரண்டு மகன்கள், கணவர், சகோதரர் என அனைவரையும் பறி கொடுத்தவர் முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.