ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும். நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் அடுத்தாண்டு பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அணிவகுப்பு:


அணிவகுப்பு குழுவில் தொடங்கி ராணுவ இசைக்குழு, கலைநிகழச்சிகள் வரையில் அனைத்திலும் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வர் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ராணுவம் மற்ற பிற துறைகளில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும்  வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த முடிவு குறித்து பாதுகாப்பு படைகளுக்கும் பல்வேறு அரசு துறைகளுக்கும் மத்திய அரசு தகவல் தெரிவித்திருப்பதாகவும் இதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம், பாதுகாப்பு படைகளுக்கும் அணிவகுப்பை ஏற்பாடு செய்யும் துறைகளுக்கும் மத்திய அரசு ஒரு அறிவிக்கையை அனுப்பியிருந்தது.


அடுத்தாண்டு நடைபெறும் அணிவகுப்பில் மகளிர் மட்டுமே கலந்து கொள்வர் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26ஆம் தேதி, ராஜபாதை என அழைக்கப்பட்டு வந்த கடமையின் பாதையில் ராணுவ நடைபெறும்.


இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி கூறுகையில், "அணிவகுப்பின்போது, ராணுவ குழு மற்றும் இசைக்குழு, கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊர்தி என அனைத்திலும் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வர் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து உள்துறை, கலாச்சாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.


துணிச்சலான முடிவை எடுத்த மத்திய அரசு:


இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் தங்களுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவின் ராணுவ வலிமை, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சாதனைகளை பறைசாற்றும் வகையில் நடத்தப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர். சுதந்திர போராட்ட வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அணிவகுப்பு அமைவது வழக்கம்.


சமீப காலமாகவே, ராணுவத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம், அவர்கள் தலைமை பதவி வகிப்பது அதிகரித்து வருகிறது. இதை காட்சிப்படுத்தும் வகையில் அணுவகுப்பு நடைபெற்றது. பாதுகாப்புப் படைகளும், துணை ராணுவப் பிரிவுகளும் பெண்களையே படைப்பிரிவு கமாண்டர்களாகவும், துணைத் தளபதிகளாகவும் தேர்வு செய்து அணிவிகுப்பில் கலந்து கொள்ள வைப்பது அதிகரித்து வருகிறது.


கடந்த 2015 ஆம் ஆண்டில், முப்படைகளிலும் பெண்கள் மட்டுமே இடம்பெற்ற படைபிரிவு அணிவகுப்பில் கலந்து கொண்டது. கடந்த 2021 ஆம் ஆண்டில், ஃப்ளைட் லெப்டினன்ட் பாவனா காந்த் அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றார்.