சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


பின்விளைவுகளை ஏற்படுத்துகிறதா கொரோனா?


கொரோனா ஓய்ந்துவிட்டாலும் அது ஏற்படுத்திய தாக்கம் எதிரொலித்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சமீப காலமாக, இளைஞர்கள் திடீரென உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், இந்த திடீர் இறப்புகளுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் உச்சப்பட்ச அமைப்புதான் ஐ.சி.எம்.ஆர். அதன் இயக்குநர் ராஜீவ் பால், இதுகுறித்து கூறுகையில், "எந்த காரணமும் இல்லாமல் திடீரென ஏற்படும் மரணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.


கொரோனாவின் பின்விளைவுகள் ஏதேனும் இருந்தால், அதைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, மற்ற இறப்புகளைத் தடுக்கவும் இந்த ஆய்வுகள் உதவும்" என்றார். எந்த ஒரு நோயும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு இளைஞர் எதிர்பாராத மரணம் அடைவதே திடீர் மரணம் என  ஐ.சி.எம்.ஆர் விளக்கம் அளித்துள்ளது.


அச்சத்தை ஏற்படுத்தும் இளைஞர்களின் திடீர் இறப்புகள்:


இளைஞர்களின் திடீர் மரணம் தொடர்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) 50 பிரேதப் பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


அடுத்த சில மாதங்களில், மேலும் 100 பிரேதப் பரிசோதனையை ஆய்வுக்கு உட்படுத்த ஐ.சி.எம்.ஆர் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து வரிவாக பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ராஜீவ் பால், "இந்த பிரேத பரிசோதனைகளின் முடிவுகளை முந்தைய ஆண்டுகள் அல்லது கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு, இறப்புக்கான காரணங்கள் அல்லது வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.


கொரோனாவுக்கு பிந்தைய உலகில் மனித உடலுக்குள் ஏதேனும் உடலியல் மாற்றங்கள் உள்ளதா? அதற்கும் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். மற்றொரு ஆய்வில், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களின் தரவுகளை பயன்படுத்தி ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து வருகிறது. 


இந்தியா முழுவதிலும் உள்ள 40 மையங்களில் இருந்து தரவுகளை சேகரித்து வருகிறது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கு கொரோனா நோயாளிகளைப் பின்தொடர்ந்து அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி அது தொடர்பான தரவுகளை இந்த மையங்கள் சேகரித்து வைத்துள்ளது.


எத்தனை பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்? அவர்களில் எத்தனை பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்? எத்தனை பேர் இறந்தனர் போன்ற தகவல்கள் அந்த மையத்தில் இருக்கின்றன. இறப்புகளுக்குப் பின்னால் உள்ள சாத்தியமான காரணங்களைப் புரிந்து கொள்ள நாங்கள் குடும்பங்களை நேர்காணல் செய்கிறோம்" என்றார்.