ஒடிஷா அருகே 3 ரயில்கள் மோதிய விபத்தில், சம்பந்தப்பட்ட ரயில் ஒன்றில் பயணித்த பயணி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ற கோரமண்டல் விரைவு ரயில் நேற்று மாலை 7 மணியளவில் ஒடிஷா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சில பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு வழித்தடத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் மீது விழுந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அருகிலுள்ள வழித்தடத்தில் வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதில் இரு பயணிகளில் ரயிலிலும் சேர்த்து மொத்தம் 16 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 230க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். 900க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் ராணுவம், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், உள்ளூர் மக்கள் உள்ளிட்டோர் இரவு, பகலாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளை மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு ஒடிஷா விரைந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள், ரயில்வே அமைச்சகம் நிதியுதவி அறிவித்துள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கிய கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி அனுபவ் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியை வரவழைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- இரவு 7.34 மணியளவில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சோரோவிற்கும் பாலசோருக்கும் இடையில் பஹானாகா மார்க்கெட் ஏரியாவில் (இச்சாபூருக்கு அருகில்) யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸுடன் மோதி தடம் புரண்டது. உதவவும் என ரயில்வே துறையின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார்.
- அடுத்ததாக நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த பதிவு வெளியிட்டுள்ளார். கோரோமண்டல் எக்ஸ்பிரஸ் 12841, யஸ்வந்த்பூர்-ஹவுரா எஸ்எஃப் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு பக்கத்தில் உள்ள டிராக்கில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது.
- “தடம் புரண்ட பெட்டிகள் அருகிலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது எதிரே வந்த யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸின் மூன்று பொதுப்பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்தது என தெரிவித்துள்ளார்.
- ஹவுராவிலிருந்து சென்னை செல்லும் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த நான், காயமின்றி தப்பித்து விட்டேன். ஆனால் நானே 200-250 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்ததை கண்டேன். தண்டவாளம் முழுக்க இரத்தம், கைகால்கள் இல்லாத உடல்கள் கிடந்ததை பார்த்தேன்.என்னால் அந்த காட்சியை மறக்க முடியவில்லை. கடவுள் அவரது குடும்பங்களுக்கு உதவ வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் அனுபவ் தாஸ் நலமாக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தற்போது இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. போலீஸ், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் தேசிய மீட்பு படையினர் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளது. நான் இப்போது பத்திரமாக வீட்டில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.