1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 25 நிமிடங்கள் 4 நாட்களுக்கு ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்படும் என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.


சுற்றறிக்கை சொல்வது என்ன?


கர்நாடகப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 25 நிமிடங்களுக்கு ரேடியோ மூலம் கற்பித்தல் நிகழ்த்தப்படும். குறிப்பாக மதியம் 2.35 மணி முதல் 3 மணி வரை 25 நிமிடங்களுக்கு உரை வழங்கப்படும். இதில் ஒழுக்கக் கல்வி, உடல் நலம், திறன் சார் கல்வி மற்றும் யோகா உள்ளிட்ட பாடங்கள் இருக்கும். 


மாநிலம் முழுவதும் 13 அகில இந்திய வானொலி நிலையங்களிலும் 3 விவித் பாரதி நிலையங்களிலும் இந்த வகுப்புகள் ஒலிபரப்பு செய்யப்படும். அதேபோல அகில இந்திய வானொலி பெங்களூரு யூடியூப் பக்கத்திலும் பிரசார் பாரதி நியூஸ் ஆன் ஏர் செயலியும் இந்த வகுப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் வகுப்பைத் தவறவிட்ட மாணவர்களும் மீண்டும் கேட்க விரும்பும் மாணவர்களும், சம்பந்தப்பட்ட பாடத்தைக் கற்கலாம். 


இதுகுறித்து அகில இந்திய வானொலி நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர். பட் கூறியதாவது:


''ரேடியோ சார்ந்த கல்வியை 25 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். எனினும் முதல் முறையாக ஒழுக்கக் கல்வி, உடல் நலம், திறன் சார் கல்வி மற்றும் யோகா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 


ஏற்கெனவே ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்த பாடங்கள் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டன. எனினும் இதைத் தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறோம். பாடப் புத்தகங்களில் இருப்பது மட்டுமல்லாமல், ஒழுக்கக் கல்வி, உடல் நலம், திறன் சார் கல்வி மற்றும் யோகா உள்ளிட்ட பாடங்களையும் சேர்க்க உள்ளோம். 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தீவிரமாக இருப்பதால், அவர்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி அன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளோம். 


என்ன புதுமை?


மாணவர்களுக்கு ஆர்வத்தை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைய உள்ளன. உதாரணத்துக்கு, பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்கள் மற்றும் கதைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, பாடல் வடிவிலும் அவற்றை வழங்குவோம். கவிதைகளை ஆசிரியர்களால் பாடி நடத்த முடியாமல் போகலாம். நாங்கள் தகுந்த கலைஞர்களைக் கொண்டு பாடம் நடத்தி, மாணவர்களையே பாட வைப்போம். இந்தப் பாடங்களில் வல்லுநர்களின் கருத்துகளும் சேர்க்கப்படும். 


தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக மாணவர்கள், தங்களின் கவனிக்கும் திறனை இழந்து வருகின்றனர். அதை ரேடியோ கல்வி வளர்க்கும். அதேபோல மாணவர்களின் கற்பனைத் திறனையும் வளர்க்க வைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த முன்னெடுப்பு, மொழி நடையையும் உச்சரிப்பையும் மேம்படுத்த உதவும். 




கொரோனா தொற்றுக்குப் பிறகு கவனச் சிதறலுக்கு ஆளான மாணவர்கள்


கேட்கும் திறனும் மனம் சிதறாமல் கவனிக்கும் நேரமும் மாணவர்களிடையே குறைந்து வருவதாக ஏராளமான ஆய்வுகள் சொல்கின்றன. கொரோனா தொற்றுக்குப் பிறகு அவர்களால் அதிக நேரம் வகுப்புகளில் அமர முடிவதில்லை. அத்தகைய மாணவர்களிடம் ஆர்வத்தை உண்டாக்கவும், அவர்களைக் கற்றலில் ஈடுபடுத்தவும் இந்த முன்முயற்சி உதவும். 


மாநிலம் முழுவதும் ஏராளமான ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளால் அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு வருவது கடினம் என்ற சூழலில், ரேடியோ கல்வி உதவும். 


ரேடியோ இல்லாத பள்ளிகள், சாதாரண மொபைல் போன்களை எஃப்எம் மோடில் வைத்து 10 வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு வரை கேட்லாம்''. 


இவ்வாறு  அகில இந்திய வானொலி நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர். பட் தெரிவித்துள்ளார்.