அடுத்தாண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. கூட்டணியினரும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


நான்கு ஜாதிகள்:


இந்த நிலையில், பிரதமர் மோடி விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இந்த திட்டத்தின் பயனாளிகளிடம் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “ நான்கு மிகப்பெரிய ஜாதிகளான ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் எனக்காக இருக்கிறார்கள். அவர்களின் எழுச்சி இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும்.


முந்தைய அரசாங்கங்கள் தங்களை மக்களின் நிலப்பிரபுகளாக கருதிய காலத்தையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்கு பிறகும் மக்களில் பெரும் பகுதியினர் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தனர். கடந்த கால அரசுகள் அரசியல் ஆதாயத்தையும், வாக்கு வாங்கியையும் பார்த்து பணிகளை மேற்கொண்டன. எனவே, மக்கள் இதுபோன்ற பிரபுத்துவ அரசுகளின் அறிவிப்புகளை ஒருபோதும் நம்பியதில்லை. நாங்கள் இதை மாற்றியுள்ளோம். இப்போது இருக்கும் அரசாங்கம் மக்களை கடவுளின் வடிவமாக கருதுகிறது.


மக்களின் அபரிமிதமான நம்பிக்கை:


இந்த நாட்டை வளர்ச்சியடையச் செய்ய நாட்டு மக்கள் தீர்மானித்திருப்பதால் பாரதம் நிற்கவோ, சோர்வடையவோ போவதில்லை.- நாட்டின் பல்வேறு மூலைகளிலும் கூட இந்த யாத்திரைக்கு நல்ல உற்சாகம் கிடைத்திருக்கிறது. அதற்கு, கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மோடியையும், மோடியின் வேலையையும் பார்த்திருக்கிறார்கள் என்பதே காரணம். எனவே, மக்கள் அரசாங்கத்தின் மீதும், அதன் முயற்சிகள் மீதும் அபரிமிதமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்,


மோடியின் உத்தரவாதம் என்ற வாகனம் 12 ஆயிரம் பஞ்சாயத்துகளில் 30 லட்சம் மக்களை சந்திக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின்போது, மோடி ஜன் ஆசாதி கேந்திராவை தொடங்கி வைத்தார். 10 ஆயிரமாவது ஜன் ஆசாதி கேந்திராவை தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.


மேலும் படிக்க: MLC Kavitha: தெலங்கானா தேர்தல்: 'மக்கள் ஆதரவு எங்களுக்கு தான்; எங்கள் டிஎன்ஏ எங்கள் மக்களுடன் ஒத்துப்போகிறது' - கவிதா


மேலும் படிக்க: SIM Card Rule: டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு ரூல்ஸ்! இனி இப்படிதான் சிம் கார்டு வாங்கமுடியும்..இல்லன்னா அபராதம்!