ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து, மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்த மக்கள் குவிந்தனர்.


ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்த குவிந்த மக்கள்:


உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஹவில்தார் மன்தீப் சிங், லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வால், லான்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹரிகிரிஷன் சிங் மற்றும் சிப்பாய் சேவக் சிங் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தனர்.


பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவர்கள் அனைவரும் அங்கு பாதுகாப்புக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இச்சூழலில், சிப்பாய் ஹர்கிரிஷன் சிங்கின் உடல் குர்தாஸ்பூரில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. ஹவில்தார் மந்தீப் சிங்கின் உடல் லூதியானா மாவட்டத்தில் உள்ள சாங்கோயன் காலானில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.


சிப்பாய் சேவக் சிங்கின் உடல் பதிண்டாவின் தல்வண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. தாக்குதலில் கொல்லப்பட்ட தேபாஷிஷ் பஸ்வாலின் உடல் இன்று ஒடிசாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரி நேற்று தெரிவித்தார்.


லான்ஸ் நாயக் குல்வந்த் சிங்கின் உடல் மோகாவில் உள்ள சாடிக் கிராமத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எம்ஐ ஹெலிகாப்டர், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.


ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்வதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ முகாமில் அவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இழந்து வாடும் ராணுவ வீரர்களின் குடும்பம்:


இதற்கிடையே, பயங்கரவாத தாக்குதலுக்கு அரசும் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என குல்வந்த் சிங்கின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


குல்வந்தின் நான்கு மாத மகனைத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு, தனது சகோதரர் தனது குடும்பத்தை நேசிப்பதாகவும், தனது மகனுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் குல்வந்த் சிங்கின் சகோதரர் கூறினார். சமீபத்தில் தனது குடும்பத்தை சந்தித்துவிட்டு, ஒன்றரை வயது மகள் மற்றும் அவரது மனைவியையும் விட்டுச் சென்றார் குல்வந்த்.


இதுகுறித்து முன்னாள் கிராமத் தலைவர் பக்ஷிஷ் சிங் கூறுகையில், "முழு கிராமமும் தங்கள் வீரம் மிக்க மகனின் இழப்பால் வேதனையடைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில், அவர் நாட்டிற்காக செய்த மிக உயர்ந்த தியாகத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறது" என்றார்.