மேற்கு வங்காளத்தில் இன்று 4-ஆம் கட்டமாக காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் கூச் பெஹார் மாவட்டத்தில் சிதல்குச், பதந்துலி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்களிக்க காத்திருந்தவர்களை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில், ஆனந்த் பர்மன் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர், மேலும் மூன்று பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த கொலைக்கு காரணம் பா.ஜ.க.தான் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர், இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுடன், வெடிகுண்டுகளும் வீசப்பட்டது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர்.
வெடிகுண்டு வீச்சாலும், தடியடிகளாலும் வாக்களிக்க வந்த பலரும் காயம் அடைந்தனர். வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற பதந்துலி பகுதியில் உள்ள 195வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.