மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையர் கடந்த மாதம் அறிவித்தார். இதன்படி, 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருபவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் அங்கு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 30 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையடுத்து, காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 191 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இவர்களில் 21 பேர் பெண் வேட்பாளர்கள்.




இதுதவிர, 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அசாம் மாநிலத்திலும் 47 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது. முதல்கட்ட தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் 43 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.  




மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதாலும், இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாலும் இரு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரும், இரு மாநில காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சானிடைசர், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளும் தீவிரமாக பின்பற்றப்படுகிறது.