காங்கிரஸ் கட்சியில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்ற தகவல் பரவிவந்தது. அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை மட்டும் தந்ததாகவும் அவர் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதை பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் விரைவில் ஒரு அரசியல் கட்சியை தொடங்க போவதாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் பீகார் முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, “பீகார் தற்போது எந்தவித தேர்தலும் வர போவதில்லை. ஆகவே அரசியல் கட்சி தொடங்கும் நோக்கம் எனக்கு இப்போது இல்லை. அடுத்த 2-3 வருடங்களுக்கு நான் மக்களை சந்திக்க போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2-ஆம் தேதி அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளாக மக்களாட்சியில் கொள்கைகளை வடிவமைக்க உதவும் என்னுடைய பயணம் சற்று ஏற்றம் இறக்கமாக இருந்தது. தற்போது என்னுடைய அடுத்த அத்தியாயத்தில் மக்களை சந்திக்க உள்ளேன். ஜன் ஸ்வராஜ்(மக்களுக்கான சுதந்திரம்) என்ற பாதையை நோக்கி பயணிக்க உள்ளேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
பிரசாந்த் கிஷோர் தன்னுடைய இந்த 3000 கிலோ மீட்டர் பாதயாத்திரையை மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக பாஜக, காங்கிரஸ்,ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பணியாற்றியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்