டெல்லி - என்.சி.ஆரில் அடுத்தடுத்து 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவலறிந்து வெடிகுண்டு செயலிழப்பு வீரர்களும், தீயணைப்பு வீரர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கிழக்கு டெல்லி மயூர் விஹாரில் உள்ள மதர் மேரிஸ் பள்ளியில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் வந்தது. அங்கையும், பள்ளி வளாகத்தில் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, சமஸ்கிருதி பள்ளிக்கும், நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கும் அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது”என தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் மின்னஞ்சல் வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. முதற்கட்ட விசாரணையில், நேற்று முதல் பல இடங்களுக்கு அஞ்சல் அனுப்பப்பட்டதாகவும், அது ஒரே மாதிரியாக இருப்பதாகவும் தெரிகிறது. ஒரே ஐடியில் இருந்து பல இடங்களில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.