பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் என்ற இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால், நிகழ்ச்சிக்கு செல்லும் பாதி வழியில் பத்திண்டா விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் மோடி “பத்திண்டா விமான நிலையம் வரை நான் உயிரோடு திரும்பியதற்கு பஞ்சாப் முதல்வருக்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.
ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை பத்திண்டா நகருக்கு வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் வழியாக ஹூசயின்வாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல இருந்தார்.
ஹூசயின்வாலாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், சிலர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், கிட்டத்தட்ட 15-20 நிமிடங்களுக்கு பிரதமர் இருந்த கான்வாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமரின் பயணம் தொடர்ந்து மேற்கொள்ளாமல் முடித்து கொள்ளப்பட்டது.
அற வழியில் போராடிய விவசாயிகளை நோக்கி எப்படிக் காவல்துறையை ஏவிவிட முடியும்?
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்ஜித் சிங் சன்னி, ‘என்னுடைய அமைச்சரவையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் என்னால் பிரதமரை அழைக்கச் செல்ல முடியவில்லை. அதற்கு பதிலாக நிதியமைச்சரிடமும் துணை முதலமைச்சரிடமும் இதற்கான பொறுப்பை ஒப்படைத்தேன். பிரதமர் செல்லும் பாதையில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகள். அவர்கள் வன்முறையின்றிதான் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது என்னால் போலீசாரை ஏவி இருக்க முடியாது. ஆனால் பிரதமருக்கான பாதுகாப்பில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருந்தால் துணை முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சருடன் கூடி இது குறித்து ஆலோசித்து விவரம் கேட்டறியப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தை அடுத்துதான் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு விளக்கம் அளித்தது. இதை அடுத்து, பாதுகாப்பாக பத்திண்டா விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் மோடி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் ஷரன்ஜித் சிங் சன்னிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.