பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். இந்நிலையில், தாயகம் திரும்பிய கையோடு நேற்று அவர் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பயணிகளைப் பார்வையிட்டார். நேற்றிரவு சுமார் 8.45 மணி மணிக்கு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். சுமார் 1 மணி நேரம் அங்கிருந்த அவர், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.






ரூ.971 கோடி செலவு:


தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகிலேயே இந்த புதிய கட்டிடமும் அமையவுள்ளது. சென்ட்ரல் விஸ்டா என்பது டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி. இந்தப் பகுதியில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளன. இதனைக் காண நாள்தோறும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். 


இந்நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் புனரமைக்க அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கும், தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.971 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளோ ஏற்கெனவே வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் தான் நாடாளுமன்றம் இருக்கிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கான அவசியம் என்னவென்று கூறி வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் பூமி பூஜைகள் நடத்தலாம் எனக் கூறியதோடு கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் தடை நீக்கப்பட்டது. தற்போது எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அங்கே கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.




விமர்சனம்..


தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமரும் வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டிடமானது மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரக்கூடிய வகையில் இடவசதியுடன் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடத்தினால் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். இதனால், பாஜக உ.பி. போன்ற பெரிய மாநிலங்களில் தனக்குள்ள செல்வாக்கை விஸ்தரிக்க இப்படியாக அவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தன்னை நிரந்தமராக ஆட்சியில் தக்கவைக்கும் சர்வாதிகார முயற்சியில் ஈடுபடுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.




அன்று படேல் சிலை; இன்று சென்ட்ரல் விஸ்டா:


உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' நர்மதையாற்றின் கரையில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்தச் சிலையை, சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினமான 2018 அக்டோபர் 31-ம் தேதி, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். இந்தச் சிலைக்கு ரூ.3000 கோடி செலவானது என்பது குறிப்பிடத்தக்கது