வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய வழியில் செல்ல வேண்டியிருந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.




இந்தத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காசி விஸ்வநாதர் திட்டம்-1ன் மூலம் 23 கட்டடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.


முதல் நிகழ்ச்சியாக கால பைரவர் கோயிலுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து காரில் வாரணாசியின் வீதிகள் வழியாக பயணம் செய்த பிரதமர் மோடிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அவரை உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் வரவேற்றனர்.






இதனையடுத்து கால பைரவர் கோயிலில் இருந்து இரண்டு அடுக்கு படகு மூலம் காசிக்கு சென்ற அவர், கங்கையாற்றில் பூக்களை தூவி புனித நீராடினார். அதன் பின்னர் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்திய அவர், ஆலய வளாக கட்டட பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பூ தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடவும் செய்தார்.


இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்துவைத்தார். அதன் பின் மக்கள் மத்தியில் ஹர ஹர மகா தேவ் என கூறிவிட்டு பேச தொடங்கிய பிரதமர் மோடி, “இன்று, இந்த மாபெரும் வளாகத்தை கட்டுவதற்கு உழைத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



கோவிட்19 காலத்திலும், பணிகள் பாதியில் நிற்கவில்லை. இது இப்படித்தான் இருக்கும் காசியை மாற்ற முடியாது என்ற எண்ணம் இருந்தது. மோடியை போல் பலர் வருவார்கள், ஆனால் எதையும் மாற்ற முடியாது என்று எண்ணினர். பல மதத்தை சேர்ந்தவர்கள் காசிக்கு வந்து செல்கின்றனர். காசி இப்போது மீண்டும்  புதிய ஒளி பெற்றுள்ளது” என்றார்.






பிரதமர் மோடியின் வருகை, 55 உயர்வகை கேமராக்கள், நான்கு ஜிம்மி ஜிப்கள் மற்றும் ஒரு பெரிய ட்ரோன் மூலம் கவரேஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தூர்தர்ஷனில் இருந்து சுமார் 100 பேர் கொண்ட குழு, 55 ஒளிப்பதிவாளர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் முகாமிட்டிருந்தனர். இந்த நிகழ்வை காண்பதற்காக 3,000-க்கும் மேற்பட்டோர் காசியில் கூடினர்.


மேலும் வீடியோக்களைப் பார்க்க..



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண