நான் விருப்பப்பட்டால் ராஜ்யசபாவுக்கு செல்வேன் என்று பேசிய ரஞ்சன் கோகாய் மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர்.


நீதிபதி கோகோய் கடந்த ஆண்டு ராஜ்யசபா உறுப்பினரானதில் இருந்து அவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான நாட்களே வருகை தந்ததாக நாடாளுமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.


இந்நிலையில் இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், "தனது மோசமான வருகைக்கு தொற்றுநோயும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டார். கொரோனா பாதித்தால் ஒரு சில அமர்வுகளில் என்னால் தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கான ஒரு கடிதத்தை நான் சமர்ப்பித்துவிட்டேன்.






மற்றபடி எனக்கு விருப்பமான போதெல்லாம் ராஜ்யசபாவுக்குச் செல்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கும் போது நான் பேச வேண்டும். அப்போது நான் செல்கிறேன். முன்னர் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டு மட்டுமே அவைக்குள் நுழையும் சூழல் இருந்தது. எனக்கு அது அசவுகரியமாக இருந்தது. அதேபோல் பெருந்தொற்று நேரத்தில் அவையில் பின்பற்றப்பட்ட இருக்கை வசதிகளும் எனக்குத் திருப்திகரமாக இல்லை. அதனால் எனக்கு விருப்பம் இருந்த நேரம் சென்றேன்" என்று நீதிபதி கோகோய் கூறினார்.


அவரது இந்த பதில் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், "இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  ராஜ்யசபாவில், தனக்கு விருப்பமானால் கலந்து கொள்வேன் என்று கூறுவது அசாதாரணமானது. இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல்" என்று ட்வீட் செய்திருந்தார்.






ஏற்கெனவே, நீதிபதி கோகோய், உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகே தனக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா பதவியில் இணைந்தார். அவருடைய அந்த நடவடிக்கையே பரவலான விமர்சனத்திற்கு உட்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் ஓர் சர்ச்சைக் கருத்தைக் கூறியிருக்கிறார்.


"எனக்கு விருப்பமான போதெல்லாம் ராஜ்யசபாவுக்குச் செல்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கும் போது நான் பேச வேண்டும். அப்போது நான் செல்கிறேன். எனக்கு ராஜ்யசபா பதவி அளிக்கப்பட்டபோது நான் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டேன். காரணம் எனக்கு நீதித்துறை, வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனை பற்றி அவையில் பேச வேண்டும். அதனால் ஏற்றுக் கொண்டேன். 


இப்போதும் நான் எப்போது அவைக்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறேனோ அப்போது செல்வதற்குக் காரணம், நான் ஒரு நியமன எம்.பி. நான் எந்தவொரு கட்சிக் கொறடாவாலும் கட்டுப்பட்டவன் இல்லை. கட்சியினர் அவைக்கு வர வேண்டும் என்று மணி ஒலித்தால் அது என்னை கட்டுப்படுத்தாது. நான் விரும்பும்போது வருகிறேன்" என்று விளக்கமும் அளித்துள்ளார்.