பிரதமர் மோடி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு பா.ஜ.க. தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி” என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தன்னிறைவு இந்தியா : சீர்த்திருத்த இந்தியா : மீள் இந்தியா : புத்துயிர் பெற்ற இந்தியா : புகழ்பெற்ற இந்தியா : உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்திய மிக வலிமையான தலைவருக்கு பிறந்தநாள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ பிரதமர் மோடிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியும் தேசத்திற்கு சேவை செய்வதற்கு முன்மாதிரியாக திகழ்கிறது. நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “71-வது பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்துடன் நாட்டை வழிநடத்தவும், சேவை புரியவும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் எங்கள் தொலைநோக்கு மற்றும் ஆற்றல் மிக்க தலைவர் பிரதமரின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகளை பற்றி ஆழமாக பாருங்கள். பொது வாழ்க்கையில் அவர் எடுத்த தைரியமான முடிவுகள் இந்தியாவின் புதிய கொடியை உருவாக்குவதற்கான பாதையை அமைத்துள்ளது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்தில், “எங்களது உத்வேகத்திற்கு, ஒரு சிறந்த தொலைநோக்கிற்கு, மிகவும் புகழ்பெற்ற, நேசிப்பிற்குரிய தலைவர் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்த்துக்கள். இந்த கடினமான காலங்களில் அவருடைய வலிமையான மற்றும் தீர்க்கமான தலைமைக்கு கீழ் இருப்பதால் நாம் பாக்கியசாலிகள் என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது திறமையான தலைமையின் கீழ் தேசம் தொடர்ந்து வளரட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு தனது டுவிட்டர் பக்கத்தில், “எங்களது பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அர்ப்பணிப்பும், தொலைநோக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வதுடன் எங்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்.”
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பாரதப்பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சர்வ வல்லவர் உங்கள் பயணம் முழுவதும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை உங்களுக்கு வழங்குவார்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதவிர பா.ஜ.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.