முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கோ-வின் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேசிய சுகாதார இயக்கத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் தெரிவித்துள்ளார்.
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய்த்தன்மை உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நாளை முதல் மூன்றாவது டோஸ் (ஜனவரி 10ம் தேதி) வழங்கப்படுகிறது. இதற்கான, அறிவிப்பை பிரதமர் மோடி 2021 டிசம்பர் 25ம் தேதி அறிவித்தார். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை டிசம்பர் 27, 2021 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது.
அதன்படி, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவைப் பெற்றபின்னர் 39 வார இடைவெளியில் தகுதி உடையவர்கள், மூன்றாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் இணை நோய்த்தன்மை குறித்த மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 8, 2022 முதல் கோ-வின் தளத்தில் பயனாளிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஜனவரி 10-ம் தேதி தடுப்பூசி செலுத்துதல் தொடங்கும் போது நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல என்றும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச் சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல என்றும் கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். 80% தடுப்பூசிகள் இவ்வாறு நேரடியாக வருபவர்களுக்கே செலுத்தப்பட்டுள்ளது. நேரடியாக மையங்களுக்கு செல்கையில் பதிவு செய்வதற்குத் தேவையான அனைத்து விவரங்கள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களுக்குத் தேவையான தகவல்களை தடுப்பூசியை செலுத்துவோரே மேற்கொள்வதுடன், குறைந்தபட்ச அடிப்படைத் தகவல்களை மட்டுமே பயனாளிகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
முன்னதாக, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி 2022 ஜனவரி 3 திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இதுவரை, இந்த வயது பிரிவினரில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சத்தால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை ; தீவிர சிகிச்சையில் இருவர் !