கோவா விடுதலை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சர்ச்சைக்குரிய வகையில் வரலாற்றைத் திரித்து கருத்துக் கூறியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 


முன்னதாக, நேற்று கோவாவில் கோவா விடுதலை தின கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் கீழ் இருந்த காலத்தில் கோவா போர்த்துகீசிய ஆதிக்கத்தின் கீழ் வந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். அதன் பிறகு இந்தியா பல கிளர்ச்சிகளை சந்தித்தது. பல நூற்றாண்டுகள் மற்றும் ஆட்சி மாற்றங்களுக்கு பிறகும், கோவா அதன் இந்தியத்தன்மையை மறக்கவில்லை, இந்தியாவின் மற்ற பகுதிகளும் கோவாவை மறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.  






1510 இல் போர்த்துகேயர்கள் கோவைவை கைப்பற்றியதாகவும்,1526ல் நடைபெற்ற முதலாவது பானிபட் போரின் தொடர்ச்சியாகத் தான் முகாலாய பேரரசு இந்தியாவில் நிறுவப்பட்டதாகவும் வரலாற்றிசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 1526ல்  நடைபெற்ற போரில், பாபர், கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார் என்பது வராலற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. போர்த்துகேயர்கள் வருகைக்கும், முகலாயர்கள் வருகைக்கும் இடையே 16 ஆண்டு கால இடைவெளி இருக்கும் நிலையில்,  கோவா போர்த்துகீசிய ஆதிக்கத்தின் கீழ் வரும் போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் கீழ் இருந்ததது என்ற பிரதமரின் கருத்து தவறானது என்றும் தெரிவிக்கின்றனர்.   'History of Portuguese Navigation in India', 'Goa-Kanara Portuguese Relations, 1498-1763', NCERT புத்தகங்கள் உள்ளிட்ட புதத்தகங்களும் இதனையே தெளிவுபடுத்துகின்றன.      



முன்னதாக, கடந்த 13ம் தேதி வாரணாசியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, " ஔரங்கசீப்பின் அராஜகங்களையும், பயங்கரவாதத்தையும் இந்த நகரின் வரலாறு கண்டது. வாள்முனையில் நாகரீகத்தை மாற்ற முயன்றவர்கள், மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது. ஆனால் இந்த நாட்டின் மண் உலகில் மற்ற பகுதிகளை விட வேறுபாடானது. ஒரு ஔரங்கசீப் இருந்தால், சிவாஜியும் இருப்பார் என்று கூறிய பிரதமர், சலார் மசூத் வந்தால், மன்னர் சுகல்தேவை போன்ற துணிச்சல்மிக்க வீரர்கள் இந்தியாவின் ஒற்றுமையின் சுவையைக் காட்டுவார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் காசி மக்கள் ஹேஸ்டிங்ஸ்-க்கு என்ன நடந்தது என்பதை அறிந்திருந்தனர் என்றார். 


இதற்கிடையே,, உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் ராகுல் தலைவர், " பெட்ரோல் விலை உயர்வு, பண வீக்கம், வேலை வாய்ப்பின்மை  குறித்து மட்டும் ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது. மக்களின் இன்னல்களுக்கு முக்கிய காரணமாக ஆர்எஸ்எஸ்-ன்    இந்துத்துவா உள்ளது" என்று தெரிவித்தார்.    


அடுத்தாண்டில் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் குற்றமற்ற வரலாற்றை, குறுகிய நோக்கில் மறுவாசிபுக்கு உட்படுத்தப்படுவது வேதனையளிக்கும் செயல் என பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.